டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம்

டெக்சாஸ் பெருவெள்ளம்: இதுவரை 120 பேர் உயிரிழப்பு; 170 பேர் மாயம்
Updated on
1 min read

அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இதில் கடந்த ஜூலை 4-ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 30 அடி வரை உயர்ந்தது. இதனால் ஹில் கன்ட்ரி பகு​தி​யில் குவாடலூப் நதிக் கரைகளில் இருந்த வீடு​கள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்லப்​பட்​டன.

கெர் கவுன்டியில் ஆற்றங்கரையோரத்தில் இருந்த கிறிஸ்தவ மாணவிகள் முகாம் இந்த வெள்ளத்தில் கடுமையாக மூழ்கியது. இதில் பலர் உயிரிழந்தனர். மீட்புப் பணியின்போது கெர் கவுன்டியில் உள்ள இந்த முகாமில் இருந்து 28 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், கெர் கவுன்டியில் இதுவரை 95 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 40 குழந்தைகள் அடங்குவர்.

இந்த வெள்ளத்தால் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டிராவிஸ், பர்னெட், கெண்டல், டாம் கிரீன் மற்றும் வில்லியம்சன் பகுடிகளில் பலர் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, டெக்ஸாஸ் மாகாணத்தில் உயிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. 170-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை இன்னும் கணிசமாக உயரக்கூடும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் காணாமல் போனோரை கண்டுபிடிக்க தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், மோப்ப நாய்கள் மற்றும் குதிரைகளை மீட்புப் படைகள் பயன்படுத்தி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in