Published : 06 Jul 2025 12:47 AM
Last Updated : 06 Jul 2025 12:47 AM
பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது அர்ஜென்டினாவில் லித்தியம் சுரங்கங்களை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸுக்கு சென்றார். விமான நிலையத்தில் ஏராளமான இந்தியர்கள், அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பியூனஸ் அயர்ஸில் இந்திய சமூகத்தினரின் அன்பான வரவேற்பால் நெகிழ்ச்சி அடைந்தேன். இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் வாழ்ந்தாலும் இந்திய உணர்வு பிரகாசமாக இருக்கிறது. கலாச்சார தொடர்புக்கு தொலைவு ஒரு தடையல்ல. அர்ஜென்டினா உடனான உறவுகள் மேம்படுத்தப்படும். அதிபர் சேவியர் மிலேய் உடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டில் அர்ஜென்டினாவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது அந்த நாட்டு அதிபர் மிலேயை பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக சந்தித்துப் பேசினார். அதன்பிறகு இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவு வலுவடைந்து வருகிறது.
தற்போது 2-வது முறையாக அதிபர் சேவியர் மிலேயே பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய், எரிவாயு, மரபுசாரா எரிசக்தி, வர்த்தகம், முதலீடு உட்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகள் இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக அர்ஜென்டினாவில் லித்தியம் சுரங்கங்களை அமைப்பது தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
சர்வதேச அளவில் சிலி, பொலிவியா நாடுகளுக்கு அடுத்து அர்ஜென்டினாவில் லித்தியம் தனிமம் அதிகமாக உள்ளது. அந்த நாட்டில் லித்தியம் சுரங்கங்களை அமைப்பது தொடர்பாக கடந்த பிப்ரவரியில் இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி அர்ஜென்டினா நாட்டின் 5 இடங்களில் மத்திய அரசின் கேஏபிஐஎல் நிறுவனம் சார்பில் சுரங்கங்களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தற்போது வரை லித்தியம் தேவைக்கு சீனாவையே இந்தியா நம்பியிருக்கிறது. அர்ஜென்டினாவில் லித்தியம் சுரங்கங்களை அமைக்கும்போது, இந்தியாவின் மின்சார வாகன நிறுவனங்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவில் இருந்து பெட்ரோலிய பொருட்கள், இருசக்கர வாகனங்கள் அர்ஜென்டினாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த நாட்டில் இருந்து சோயாபீன் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அர்ஜென்டினாவின் சோயாபீன் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 95 சதவீதம் இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது அர்ஜென்டினாவில் இருந்து லித்தியத்தை அதிக அளவில் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அந்த நாட்டில் இந்திய அரசு நிறுவனம் சார்பில் லித்தியம் சுரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் நிலக்கரி, தாமிரம் உள்ளிட்ட தாதுக்களையும் அதிக அளவில் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
400 கி.மீ. கடந்து வந்த இந்தியர்: இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவிஜய் குமார் குப்தா, அர்ஜென்டினாவின் ரோசாரியா நகரில் பணியாற்றி வருகிறார். இது தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரதமர் மோடியை வரவேற்க 400 கி.மீ. தொலைவை கடந்து விஜய் குமார் குப்தா நேற்று பியூனஸ் அயர்ஸ் நகருக்கு சென்றார். அவர் கூறும்போது, “பிரதமர் மோடியுடன் கைகுலுக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அது போதும்" என்று தெரிவித்தார்.
டிரினிடாட் நாட்டில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டில் முகாமிட்டிருந்தார். அப்போது அவருக்கு அந்த நாட்டின் மிக உயரிய, ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் & டொபாகோ என்ற விருதை அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்கலூ வழங்கினார். அவரது முன்னோர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, "டிரினிடாட் அதிபர் கார்லா கங்கலூவின் முன்னோர் திருவள்ளுவர் பிறந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். சிறந்த ஆட்சி குறித்த 6 முக்கிய கொள்கைகளை அப்போதே திருவள்ளுவர் எடுத்துரைத்து உள்ளார்" என்று தெரிவித்தார்.
‘‘படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு’’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். வீரமிக்க படை, நாட்டுப்பற்றுமிக்க மக்கள், குறையாத செல்வம், நாட்டின் நலன் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் நட்பு, அழிக்க முடியாத காவல் ஆகிய 6 அம்சங்களே அரசுகளில் சிங்கம் போன்றது என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT