Published : 05 Jul 2025 05:56 PM
Last Updated : 05 Jul 2025 05:56 PM
இஸ்லாமாபாத்: லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு எவ்வித ஆட்சேபனையும் இருக்காது என்று பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான பிலாவல் பூட்டோ, அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் விவாதிக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய அமைப்புகள் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளித்த குற்றச்சாட்டில் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயத் 33 ஆண்டுகளுக்கான சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.
ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவர் மசூத் அசார், ஆப்கனிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் நம்புகிறது. அவர் பாகிஸ்தானில் இருக்கிறார் என்பது இந்தியாவின் வாதமானால், அது குறித்த தகவல்களைக் கொடுத்தால் நாங்கள் அவரை கைது செய்வோம். 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு ஹபீஸ் சயீத் மூளையாக செயல்பட்டதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது. அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.
தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய ஆதாரங்களை இந்தியா, பாகிஸ்தான் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். உரிய நடைமுறைகளை இந்தியா பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் இந்தியா ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இந்தியா ஒத்துழைக்கத் தயாராக இருந்தால், உரிய நபர்களை நாடு கடத்துவதில் எந்தத் தடையும் இருக்காது என்று நான் நம்புகிறேன்.
இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால், அது போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்றும், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்றும் இந்தியா கூறுகிறது. இந்தியாவின் இத்தகைய போக்கு கவலைக்குரியது. இது பாகிஸ்தானின் நலன்களுக்கோ, இந்தியாவின் நலன்களுக்கோ உதவாது" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT