Published : 04 Jul 2025 12:23 PM
Last Updated : 04 Jul 2025 12:23 PM
வாஷிங்டன்: உக்ரைன் உடனான போரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிறுத்துவார் என்று தோன்றவில்லை என்றும் அவர் விஷயத்தில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, “நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவேன்.” என வாக்குறுதி அளித்தவர் டொனால்ட் ட்ரம்ப்.
இரண்டாவது முறையாக டொனால்ட் டரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் அமெரிக்க அதிபரானதில் இருந்து போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டரம்ப், விளாடிமிர் புதினுடன் 5 முறை தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தைக்கும்ப் பிறகும் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்த டொனால்ட் டரம்ப், கடைசியாக கடந்த வியாழக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதல்முறையாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
விளாடிமிர் புதினுடனான தொலைபேசி பேச்சுவார்த்தை குறித்து வெள்ளிக்கிழமை (ஜூலை 4) அதிகாலை செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “எங்கள் தொலைபேசி உரையாடல் நீண்ட நேரம் நடைபெற்றது. ஈரான் உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். உக்ரைனுடனான போரைப் பற்றியும் பேசினோம். ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவ்விஷயத்தில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. விளாடிமிர் புதின் விஷயத்தில் நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன். உக்ரைன் மீதான போரை அவர் நிறுத்துவார் என்று தோன்றவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT