ஈரான் தனது வான்வெளியை மீண்டும் திறந்தது; விமான சேவைகள் தொடக்கம்!

ஈரான் தனது வான்வெளியை மீண்டும் திறந்தது; விமான சேவைகள் தொடக்கம்!
Updated on
1 min read

தெஹ்ரான்: இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான போர் காரணமாக கடந்த ஜூன் 13-ம் தேதி ஈரான் வான்வெளி மூடப்பட்டது.

இதுகுறித்து ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் மற்றும் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையங்களும், ஈரான் நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், ஈரானில் முழுமையாக விமானங்கள் இயங்கத் தயாராக உள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, இஸ்ஃபஹான் மற்றும் தப்ரிஸில் உள்ள விமான நிலையங்களைத் தவிர, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலிருந்தும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படும் என்று ஈரான் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உள்கட்டமைப்பு பணிகள் முடிந்தவுடன் இஸ்ஃபஹான் மற்றும் தப்ரிஸில் இருந்து விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கும் என்று ஐஆர்என்ஏ தெரிவித்தது.

கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தொடங்கிய பின்னர் ஈரான் தனது வான்வெளியை முழுவதுமாக மூடியது. இதன் பின்னர் கடந்த ஜூன் 24-ல் இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in