பிரதமர் மோடிக்கு ‘தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருது வழங்கல்!

பிரதமர் மோடிக்கு ‘தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருது வழங்கல்!
Updated on
1 min read

அக்ரா(கானா): கானாவின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இரண்டு நாள் பயணமாக நேற்று கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மகாமா, விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். இன்று, அதிபர் ஜான் டிராமணி மகாமா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் நாட்டின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”-வை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.

விருதை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, "கானாவின் தேசிய விருதான "தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா" விருது கானா அதிபரால் வழங்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கானா அதிபர் மகாமாவுக்கும், கானா அரசுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த கவுரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

நமது இளைஞர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் நம்பிக்கைக்குரிய எதிர்காலம், நமது வளமான கலாச்சார பன்முகத்தன்மை, மரபுகள், இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையிலான நீடித்த வரலாற்று பிணைப்புகள் ஆகியவற்றுக்கு இந்த கவுரவத்தை நான் அர்ப்பணிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான புதிய பொறுப்பை இந்த விருது தமக்கு வழங்குவதாகவும், கானாவுக்கான தமது வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறைப் பயணம் இந்தியா - கானா உறவுகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விருதை அடுத்து, 24-வது சர்வதேச கவுரவத்தை பிரதமர் பெற்றிருப்பதாக மத்திய சிறபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “24வது சர்வதேச கவரவம், 140 கோடி கனவுகள், ஒரு இடைவிடாத தொலைநோக்குப் பார்வை. பிரதமர் நரேந்திர மோடி கானாவின் மிக உயர்ந்த அரசு விருதைப் பெற்றுள்ளார். இதன்மூலம், உலக அரங்கில் இந்தியாவின் பயணத்தில் மற்றொரு மைல்கல்லைச் சேர்த்துள்ளார். இது ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமான அங்கீகாரம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in