Published : 14 Jul 2018 05:51 PM
Last Updated : 14 Jul 2018 05:51 PM

‘‘அபத்தமாக பேசாதீங்க’’ - லண்டன் எதிர்ப்பு போராட்டத்தால் கடுப்பான ட்ரம்ப்: பதிலடி கொடுத்த மேயர்

லண்டன் நகரில் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் நடந்த நிலையில் அந்நகர முஸ்லிம் மேயரை தாக்கி ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரம்பின் பேச்சு அபத்தமானது என மேயர் சாதிக் கான் பதிலடி கொடுத்துள்ளார்.

ட்ரம்ப், அவரது மனைவி மெலினா ஆகியோர் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே, ராணி எலிபெத் உள்ளிட்டோரை ட்ரம்ப் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ட்ரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ட்ரம்ப் திரும்பி போ’ என்ற கோஷத்துடன் லண்டனில் பேரணிகள் நடந்தன.

சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு பிரசாரங்கள் நடந்து வருகின்றன. லண்டன் மையப்பகுதியில் உள்ள சதுக்கத்தில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் ட்ரம்புக்கு எதிராக கண்டன பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ட்ரம்ப்பை கிண்டல் செய்து அவர்கள் பலூன்களையும் பறக்கவிட்டனர். ட்ரம்ப், பேபி பலூன் ஒன்றை போராட்டக்காரர்கள் பறக்க விட்டனர். இதனால் ட்ரம்ப் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

லண்டன் நகரில் ட்ரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் நடந்தபோது அதனை கட்டுப்படுத்தாமல் சாதிக் கான் அலட்சியமாக இருந்து விட்டதாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இதைத் தொடர்ந்து சாதிக் கானை விமர்சித்து ட்ரம்ப் கருத்து கூறியுள்ளார். ‘‘லண்டனின் மேயராக இருக்கும் நீங்கள் மிக பயங்கரமான செயலை செய்துள்ளீர்கள்’’ எனக் கூறியுள்ளார். லண்டனில் குற்றச்செயல்கள், கொலைகள் அதிகரித்து வருவதற்கு வெளிநாடுகளில் இருந்து இங்கு குடியேறி வருபவர்களே காரணம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்துள்ள சாதிக் கான், ‘‘தீவிரவாதம் என்பது உலகளாவிய பிரச்சினை. ஐரோப்பிய நகரங்கள் அனைத்தையும் பாதித்துள்ளது. ஆனால் ட்ரம்ப் மற்ற எந்த நாட்டின் மேயரை பற்றியும் பேசவில்லை. ஆனால் என்னை பற்றி பேசுகிறார். ட்ரம்பின் இதுபோன்ற பேச்சு குறித்து பிரதமர் தெரஸா மே தான் பேச வேண்டும். ட்ரம்பு என்ன வேண்டுகிறார் என்பதை அவர் தான் கேட்க வேண்டும். இதுபற்றி நான் பேசப் போவதில்லை. மற்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் குடியேறுபவர்களால் தான் குற்றச் செயல்கள் அதிகரிப்பதாக கூறுவது அபத்தமானது’’ எனக் கூறியுள்ளார்.

லண்டன் நகர மேயராக இருக்கும் சாதிக் கான், பாகிஸ்தானில் இருந்து லண்டனில் குடியேறிய வம்சாவளியினர். அவரது தந்தை ஓட்டுநராக இருந்து 1960-ம் ஆண்டு லண்டனில் குடியேறினார். இங்கிலாந்தில் தற்போது எதிர்கட்சியாக இருக்கும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த மேயர் சாததிக் கான், ட்ரம்ப் பற்றி ஏற்கெனவே கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்கா வருவதற்கு ட்ரம்ப் அரசு தடை விதித்தது. அப்போது ட்ரம்பின் செயலை சாதிக் கடுமையாக விமர்சித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x