இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 400 பேர் உயிரிழப்பு; 3,056 பேர் காயம்

இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 400 பேர் உயிரிழப்பு; 3,056 பேர் காயம்
Updated on
1 min read

தெஹ்ரான்: இஸ்ரேலின் தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,056 பேர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் சுகாதார அமைச்சக மக்கள் தொடர்புத் தலைவர் ஹொசைன் கெர்மன்பூர், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “9வது நாளாக தொடரும் தாக்குதல்களில் 54 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டனர். 3,056 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் ஆவர்.

இஸ்ரேலின் தாக்குதல்களில் காயமடைந்தவர்களில், 2,220 பேர் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் 232 பேர் தாக்குதல் நடந்த இடத்திலேயே வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இந்தக் காலகட்டத்தில், நாடு முழுவதும் உள்ள எங்கள் மருத்துவக் குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு 457 அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளன.” என்று தெரிவித்தார்.

மீண்டும் இணைய சேவை: ஈரானில் இணைய சேவை மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி ஈரானில் வசிக்கும் 90 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்த வாரத்தின் தொடக்கத்தில் தொலைபேசி மற்றும் ஆன்லைன் சேவைகள் துண்டிக்கப்பட்டன.

தற்போது இணைய சேவை ஓரளவு மீளத் தொடங்கியுள்ளதால், ஈரானியர்கள் சில நாட்களுக்குப் பிறகு தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in