‘எனது 17 பில்லியன் டாலர் சொத்தை என் 106 பிள்ளைகளுக்கு வழங்குகிறேன்’ - டெலிகிராம் சிஇஓ அறிவிப்பு

பவெல் துரோவ்
பவெல் துரோவ்
Updated on
1 min read

துபாய்: தனது 17 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை தன் 106 பிள்ளைகளுக்கு சரிசமமாக பிரித்து வழங்கிட முடிவு செய்துள்ளதாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவ் கூறியுள்ளார்.

40 வயதான அவர், பிரெஞ்சு மொழி செய்தி இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இதை பகிர்ந்துள்ளார். சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு டெலிகிராம் நிறுவனம் துணை போன குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்ற நிலையில் பிரான்ஸில் இருந்து வெளியேறலாம் என கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

“எனது குழந்தைகளுக்கு இடையே நான் எந்தவிதமான வித்யாசத்தையும் பார்ப்பதில்லை. இயற்கையான முறையில் கருத்தரித்தவர்கள், எனது விந்தணு தானத்தால் பிறந்தவர்கள் என எல்லோரும் எனக்கு ஒன்றுதான். எல்லோருக்கும் சமமான உரிமை உண்டு என நினைக்கிறேன்.

அவர்கள் யாரையும் சாராமல் சுயமாக, சுதந்திரமாக வளர வேண்டும் என நினைக்கிறேன். ஒரு சாமானியனை போலவே அவர்கள் வளர வேண்டும். எல்லோருக்கும் எனது சொத்தை சரிசமமாக பகிர்ந்து தர விரும்புகிறேன். நான் உயில் எழுதிய போது எனக்கு இந்த திட்டம் வந்தது” என பவெல் துரோவ் கூறியுள்ளார். இருப்பினும் இன்னும் 30 ஆண்டுகளுக்கு பிறகே இந்த சொத்துகள் துரோவ் பிள்ளைகளுக்கு சேரும் என தகவல்.

பவெல் துரோவுக்கு இயற்கையான முறையில் ஆறு குழந்தைகள் உள்ளன. மேலும், விந்தணு தானம் மூலம் சுமார் 100 குழந்தைகளுக்கு அவர் உயிர் கொடுத்துள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக அவர் விந்தணு தானம் செய்து வருகிறார். ஃபோர்ப்ஸ் நிறுவன அறிக்கையின் படி அவரது சொத்தும் மதிப்பு 17.1 பில்லியன் டாலர். ப்ளூம்பெர்க் பட்டியலில் அவரது சொத்து மதிப்பு 13 பில்லியன் டாலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சொத்தை அவரது 106 குழந்தைகளுக்கு பிரித்து வழங்கினால் ஒவ்வொருவருக்கும் சுமார் 131 மில்லியன் மற்றும் 161 மில்லியன் வரையில் கிடைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in