இஸ்ரேலின் பெர் செவா பகுதியில் உள்ள சொரோகா மருத்துவமனை மீது ஈரான் நேற்று ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் மருத்துவமனை கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது. பலர் காயம் அடைந்தனர்.  படம்: பிடிஐ
இஸ்ரேலின் பெர் செவா பகுதியில் உள்ள சொரோகா மருத்துவமனை மீது ஈரான் நேற்று ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் மருத்துவமனை கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது. பலர் காயம் அடைந்தனர். படம்: பிடிஐ

இஸ்ரேல் மருத்துவமனை மீதான ஈரான் தாக்குதல் - நெதன்யாகு எச்சரிக்கை

Published on

டெல் அவிவ்: ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை கடின நீர் ஆலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேலின் முக்கிய மருத்துவமனை மீது ஈரான் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நேற்று 7-வது நாளாக தொடர்ந்தது. ஈரானின் அராக் நகரில், அணு உலையில் பயன்படுத்தப்படும் கடின நீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அங்கு தாக்குதல் நடத்தப்போவதால், அருகில் வசிக்கும் அப்பகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் அராக் நகரின் கடின நீர் ஆலை மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று காலை குண்டுகளை வீசின. இந்த ஆலையை ஈரான் ஏற்கெனவே காலி செய்திருந்தது. இதனால் இங்கு அதிக பாதிப்புகள் ஏற்படவில்லை. கதிர்வீச்சு கசிவு அபாயமும் ஏற்படவில்லை.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், “அணு ஆயுத தயாரிப்புக்கு, அணு உலைகளை பயன்படுத்துவதை தடுப்பதற்காக இங்கு தாக்குதல் நடத்தினோம். ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள மற்றொரு அணுசக்தி மையம் தொடர்பான இடத்திலும் தாக்குதல் நடத்தினோம்” என்றனர்.
இதற்கு பழிவாங்கும் வகையில் தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவ மையம் மீது ஈரான் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த மருத்துவமனை 1,000 படுக்கைகள் கொண்டு முக்கிய மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. ஏவுகணை தாக்குதலில் மருத்துவமனையின் பல பகுதிகள் சேதம் அடைந்தன. பலர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த சேதம் அடைந்ததால் இந்த மருத்துவமனை நேற்று மூடப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களை தவிர மற்ற நோயாளிகள் இங்கு வரவேண்டாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நெதன்யாகு எச்சரிக்கை: இஸ்ரேலில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘‘இஸ்ரேலில் பல மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எல்லாம் அடித்தளத்தில் வாகன நிறுத்தும் இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஈரானின் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அதிக விலை கொடுப்பர்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in