பாதாள அறையில் தஞ்சமடைந்த கொமேனி

அயத்​துல்லா அலி கொமெனி
அயத்​துல்லா அலி கொமெனி
Updated on
1 min read

டெஹ்ரான்: இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி (86) குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளார்.

கடந்த 13-ம் தேதி ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் விமானப் படை திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் 4 அணு சக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. அந்த நாட்டின் 14 அணு சக்தி விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. நான்காவது நாளாக நேற்றும் போர் நீடித்தது.

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உளவுத் துறை தலைவர் முகமது கசாமி நேற்று கொல்லப்பட்டார். தெஹ்ரானில் உள்ள ஈரான் பாதுகாப்புத் துறை தலைமை அலுவலகம், வெளியுறவுத் துறை அலுவலகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் இரு அலுவலகங்களும் தரைமட்டமாகின.

ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி, தலைநகர் தெஹ்ரானின் வடகிழக்கில் லாவிஜான் பகுதியில் உள்ள பாதாள அறையில் குடும்பத்துடன் தஞ்சமடைந்து உள்ளார். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த 13-ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தினோம். அன்றைய தினமே அயத்துல்லா அலி கொமேனி மீதும் தாக்குதல் நடத்தியிருக்க முடியும். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறோம்.

ஈரானின் அணு ஆயுத திட்டத்தை அவர் முழுமையாக கைவிட வேண்டும். இல்லையெனில் அணு ஆயுத திட்டத்துக்கான கட்டமைப்புகளை இஸ்ரேல் முழுமையாக அழிக்கும். அயத்துல்லா அலி கொமேனி பாதாள அறையில் பதுங்கியிருந்தாலும் எங்களால் தாக்குதல் நடத்த முடியும். இவ்வாறு இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியதாவது: கடந்த 1979-ம் ஆண்டில் ஈரானில் புரட்சி ஏற்பட்டது. அப்போது மன்னராட்சி அகற்றப்பட்டது. இதன்பிறகு ஷியா பிரிவு மதத் தலைவர்களே ஈரானை ஆட்சி செய்து வருகின்றனர். அந்த நாட்டின் அதிபர் மசூத் பெசெஷ்கியன், பெயரளவுக்கு மட்டுமே அதிபராக பதவி வகிக்கிறார்.

தற்போதைய ஷியா மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனியே ஈரானை திரைமறைவில் ஆட்சி செய்து வருகிறார். அவரை அகற்றிவிட்டு, ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இஸ்ரேல் வியூகம் வகுத்து உள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், ஏமனை சேர்ந்த ஹவுத்தி தீவிரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்த 3 தீவிரவாத அமைப்புகளும் வலுவிழந்துவிடும். எனவே ஈரானுக்கு எதிரான போரை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது. இவ்வாறு சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in