ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் - நேரலையில் அதிர்ந்த கட்டிடம்

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் - நேரலையில் அதிர்ந்த கட்டிடம்
Updated on
2 min read

டெல் அவிவ் / தெஹ்ரான்: ஈரான் மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல் ராணுவம். இதில், ஈரான் நாட்டின் அரசு தொலைக்காட்சி ஊடக நிறுவனமான ஈரானின் இஸ்லாமிய குடியரசு நியூஸ் நெட்வொர்க் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின்போது கட்டிடம் அதிர்ந்து கரும்புகை எழுந்தது, அந்த தொலைகாட்சி நிறுவனத்தின் ஸடூடியோவில் நேரலை நிகழ்ச்சியில் பதிவானது.

முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரானின் அரசு ஊடகத்துக்கு சொந்தமான தொலைகாட்சி, வானொலி நிலையம் அழிக்கப்படும் என கூறி இருந்தது கவனிக்கத்தக்கது. இதனிடையே, ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பை தாக்கி அழிக்கும் வகையில் தெஹ்ரானில் உள்ள பொது மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்திருந்தது. இதையடுத்து அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

ஈரான் அரசு செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது தாக்குதல்: திங்கட்கிழமை அன்று நேரலையில் தொகுப்பாளர் ஒருவர் ஈரான் அரசு தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து அந்த தொகுப்பாளர் தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் செயல்பட்டார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தெஹ்ரானில் உள்ள அந்த அலுவலகம் மோசமாக சேதமடைந்தது.

ஈரான் செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக அந்தச் செய்தி நிறுவனத்தின் ஒளிபரப்பு சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. ‘உண்மையின் குரலை ஒடுக்கும் முயற்சி’ என இஸ்ரேலை குற்றம்சாட்டி மீண்டும் ஒளிபரப்பு தொடங்கியது.

لحظه حمله به صداوسیما pic.twitter.com/25YTKgHKY6

முன்னதாக, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பரவலாக தாக்குதலை நடத்தி இருந்தது இஸ்ரேல். மேலும், தாக்குதலுக்கு முன்னதாக தெஹ்ரானில் இருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்தது. இந்த அறிவிப்பை பாரசீக மொழியில் ஈரான் மக்களிடம் இஸ்ரேல் தெரிவித்தது. அதே நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என இஸ்ரேல் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

ஈரான் தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு: திங்கட்கிழமை அன்று இஸ்ரேலின் பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல். ஏற்கெனவே, கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் தொடரும் நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் போர் மூளும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது.

கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது. அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்று பெயரில் இந்த தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலை சேர்ந்த 24 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதை அந்த நாட்டின் பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. இதில் காயமடைந்த சுமார் 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

ஈரானில் 224 பேர் உயிரிழப்பு: கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானை சேர்ந்த 224 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. சுமார் 1,277 பேர் காயமடைந்து உள்ளதாக தகவல். இஸ்ரேல் - ஈரான் மோதலில் ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலில் ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு வழங்கியுள்ளது. | முழு விவரம்: இஸ்ரேல் - ஈரான் போரில் உயிரிழப்புகள் அதிகரிப்பு: சேதங்கள் மிகுந்த 4-வது நாளின் நிலவரம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in