காசாவில் இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு: 38 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
கான் யூனிஸ்(காசா): காசாவில் உணவு விநியோக மையங்கள் அமைந்துள்ள பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா பிரதேசத்தின் தெற்கில் உள்ள உணவு விநியோக மையங்களில் நடந்த புதிய துப்பாக்கிச் சூடுகளில் 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் நாள்தோறும் உணவு மையங்களை நோக்கிச் செல்கின்றனர். அவர்கள் மீது இதற்கு முன்பும் பலமுறை துப்பாக்கிச் சூடுகள் நடந்து பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இன்று நடந்த இறப்புகள் குறித்து இஸ்ரேலிய ராணுவம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. முந்தைய சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப் படையினர், தங்கள் நிலைகளை நெருங்கும் சந்தேக நபர்கள் மீது எச்சரிக்கை கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
