Last Updated : 13 Jun, 2025 11:31 AM

5  

Published : 13 Jun 2025 11:31 AM
Last Updated : 13 Jun 2025 11:31 AM

ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

தெஹ்ரான்: ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இன்று ( ஜூன் 13) ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரான் நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது.

வான்வழி தாக்குதல் மட்டுமல்லாது இஸ்ரேலின் மொஸாட் (MOSSAD) அமைப்பும் ஈரானில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டதாக இஸ்ரேல் ராணுவ வானொலி தெரிவித்தது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதிகள், வீரர்கள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹுசைன் சலாமி உயிரிழந்திருப்பதாவும் தகவல் வெளியாகி உள்ளது. இது மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட தாக்குதல் என சர்வதேச செய்திகளை வெளியிடும் ஊடக நிறுவனங்கள் கூறியுள்ளன. அடுத்து என்ன செய்யலாம் என ஈரான் தரப்பில் முடிவெடுக்க கூடிய முக்கியஸ்தர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்.

இந்த தாக்குதலுக்கு என்ஐஏசி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அப்பாவி மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இதில் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும், இது அமெரிக்காவை உள்ளடக்கிய பெரிய அளவிலான போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த தாக்குதலை தன்னிச்சையாக நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதை இஸ்ரேலின் ஐநா தூதர் டேனி டானன் கூறியுள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

தக்க பதிலடி: ஈரான் மீதான தாக்குதலை அடுத்து இஸ்ரேலுக்கு தக்க பதிலடி தரப்படும் என ஈரானின் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் அபோல்பஸ்ல் ஷேகார்ச்சி கூறியுள்ளார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியின் ஆலோசகர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் எல்லை பகுதியில் அதிகளவிலான வீரர்களை அந்நாட்டு ராணுவம் குவித்து வருகிறது. ஈரான் எந்த நேரமும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள காரணத்தால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவத் தலைவர் இயால் ஜமீர் கூறியுள்ளார். முன்னெப்போதும் காணாத வகையில் ஈரானின் தாக்குதல் இருக்கக் கூடும். இருப்பினும் அதை முறியடிக்க ராணுவம் முயற்சிக்கு என இஸ்ரேல் மக்களிடம் அவர் கூறியுள்ளார்.

ஈரான் மீதான தாக்குதலுக்கு மிகவும் மோசமான நிலையை எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராக இருக்க வேண்டும் என அயதுல்லா அலி காமெனி கூறியுள்ளார். அவர் உயிரோடு இருப்பதை ஈரான் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. ஈரானின் ராணுவ தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு அடுத்து உள்ளவர்கள் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்துவார்கள். அது இஸ்லாமிய குடியரசு ஆயுதப் படையின் அசுர சக்தியை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இருக்க வேண்டும் என அயதுல்லா அலி காமெனி கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அணுசக்தி நிலையம் தாக்கப்பட்டு இருந்தாலும் அதிலிருந்து கதிர்வீச்சு வெளியேற்றம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என சர்வதேச அணுசக்தி நிறுவன அமைப்பு கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x