ட்ரம்ப் நகர்வுகளுக்கு எதிராக பரவும் கலவரம் - அமெரிக்காவில் நடப்பது என்ன?

ட்ரம்ப் நகர்வுகளுக்கு எதிராக பரவும் கலவரம் - அமெரிக்காவில் நடப்பது என்ன?
Updated on
2 min read

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு எதிராக அந்த நாட்டின் 25 நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது.

அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக மெக்ஸிகோ மற்றும் தென்அமெரிக்க நாடுகளை சேர்ந்தோர் நாள்தோறும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரம் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவர்கள் நகரம் முழுவதும் சாலை, தெருக்களில் பேரணி நடத்தினர். அப்போது பெரும் கலவரம் வெடித்தது. தற்போது கலவரத்தை கட்டுப்படுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டு உள்ளது. 1,100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்தச் சூழலில் நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, டல்லாஸ், ஆஸ்டின், சியாட்டில், போர்ட்லேண்ட், பிட்ஸ்பர்க், டெட்ராய்ஸ்ட், மெட்போர்டு, மின்னிபோலிஸ், சிகாகோ, நியூ ஆர்லியன்ஸ், அட்லாண்டா, ஆஸ்வில்லா உட்பட 25 நகரங்களுக்கு கலவரம் பரவி உள்ளது.

தென்அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்கா முழுவதும் சாலை, தெருக்களில் பெருந்திரளானோர் கூடி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது சமூக விரோதிகள் கடைகளை சூறையாடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்க மக்களில் ஒருதரப்பினரும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். கடந்த சில நாட்களாக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன” என்று தெரிவித்தன.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறும்போது, “சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும். சாலை, தெருக்களில் போராட்டம் நடத்துவோர், கடைகளை சூறையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டக்காரர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவர். தேவைப்பட்டால் ராணுவம், கடற்படை களமிறக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சூழலில் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஜூன் 14-ம் தேதி வாஷிங்டனில் பிரம்மாண்ட ராணுவ பேரணி நடத்தப்பட உள்ளது. அன்றைய தினம் அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு தினம் ஆகும். மேலும் ஜூன் 14-ம் தேதி அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது பிறந்த நாளையும் கொண்டாடுகிறார்.

கலவரம் குறித்து ஆளும் குடியரசு கட்சி வட்டாரங்கள் கூறும்போது, “லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டவிரோத குடியேறிகள் போராட்டம் நடத்தினர். இதை ஜனநாயக கட்சி பெரும் கலவரமாக மாற்றியிருக்கிறது. அந்த கட்சி சார்பில் கலவரம் தூண்டப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்களுக்கு ஜனநாயக கட்சி சார்பில் பெருமளவு நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் திரைமறைவில் தாராளமாக நிதியுதவிகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in