Published : 10 Jun 2025 10:47 AM
Last Updated : 10 Jun 2025 10:47 AM
லாஸ் ஏஞ்சல்ஸ்: சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிரான கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, நேஷனல் கார்டு படை வீரர்களுடன் தற்போது யுஎஸ் மரைன்ஸ் என்ற பாதுகாப்புப் படைப் பிரிவினைச் சேர்ந்த 700 வீரர்கள் லாஸ் எஞ்சல்ஸ் வரவழைக்கபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, தேசிய படையைச் சேர்ந்த வீரர்களுடன் தற்போது ‘யுஎஸ் மரைன்ஸ்’ என்ற பாதுகாப்புப் படையின் கடற்படை பிரிவினைச் சேர்ந்த 700 வீரர்கள் லாஸ் எஞ்சல்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தெற்கு கரோலினா முகாமில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் 4-வது நாளாக லாஸ் ஏஞ்சல்ஸ் பற்றி எரிகிறது.
சக்திவாய்ந்த யுஎஸ் மரைன்ஸ் - யுஎஸ் மரைன்ஸ் என்பது அமெரிக்க கடற்படையின் ஒரு பிரிவாக இருந்தாலும் கூட நிலத்தில் ஏற்படும் அதிதீவிரமான கலவரங்களைக் கட்டுப்படுத்தவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருக்கும் வீரர்கள் மிகவும் திறமையானவர்களாக அறியப்படுகின்றனர். மூர்க்கத்தனமான கலவரங்களைக் கையாள்வதில் கைதேர்ந்தவர்கள் என்று அறியப்படுகிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸில் 4-வது நாளாக கலவரம் நடந்து வரும் நிலையில், அந்தக் கலவரத்தை ஒடுக்க ட்ரம்ப் எடுத்த முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய நிருபர் மீது துப்பாக்கிச் சூடு: லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம் பற்றி செய்தி சேகரித்து நேரலையில் வழங்கிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் பெண் நிருபர் காலில் அமெரிக்க காவல்துறை ரப்பர் புல்லட் கொண்டு சுட்டதில் அவர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவத்திற்கு ஆஸ்திரேலியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பத்திரிகையாளர்கள் அவர்களின் பணியை பாதுகாப்பாக மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். நைன் நியூஸ் ( Nine News) ஊடகவியலாளர் மீதான துப்பாக்கிச் சூட்டை அரசு வன்மையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர், கலிபோர்னியா ஆளுநர் ஆகியோர் அரசுக்கு எதிராக செயல்படுவதாக அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூஸம், “மாகாண போலீஸாரே கலவரத்தைக் கட்டுப்படுத்த போதும். ஆனால், மாநில நிர்வாகத்தை மதிக்காமல் ட்ரம்ப் மத்திய படைகளை அனுப்பியுள்ளது தவறான செயல்.” எனக் கண்டித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT