Last Updated : 09 Jun, 2025 04:44 PM

1  

Published : 09 Jun 2025 04:44 PM
Last Updated : 09 Jun 2025 04:44 PM

காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற கிரேட்டா தன்பர்க் கடத்தப்பட்டாரா? - இஸ்ரேல் விளக்கம்

காசா: காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான மேட்லீனில் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கூறியுள்ளார். அதன்பின், அவர் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை அதிகாலை காசாவை நோக்கிச் சென்றபோது, ​​மேட்லீன் நிவாரணக் கப்பலை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்தன. அது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசிய கிரேட்டா தன்பர்க், "இந்த வீடியோவை நீங்கள் பார்த்தால், நாங்கள் சர்வதேச நீரில் தடுத்து நிறுத்தப்பட்டு கடத்தப்பட்டுள்ளோம். என்னையும் மற்றவர்களையும் விரைவில் விடுவிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

இருப்பினும், சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் சமூக வலைதளத்தில் கிரேட்டா தன்பர்க்கின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "கிரேட்டா தன்பர்க் தற்போது இஸ்ரேல் வழியாக பாதுகாப்பாகவும் நல்ல மனநிலையுடனும் சென்று கொண்டிருக்கிறார்" என்று கூறியது.

மேட்லீன் கப்பலில் ரிமா ஹாசன், ரேவா வியார்ட், பாப்டிஸ்ட் ஆண்ட்ரே, பாஸ்கல் ரேமண்ட் மௌரியராஸ், யானிஸ் மஹம்டி (அனைவரும் பிரான்சைச் சேர்ந்தவர்கள்), செர்ஜியோ டோரிபியோ (ஸ்பெயின்), மார்க் வான் ரென்னெஸ் (டென்மார்க்), ஹுசைன் சுவாய்ப் ஓர்டு (துருக்கி), யாசெமின் அகார் (ஜெர்மனி) மற்றும் தியாகோ அவிலா (பிரேசில்) ஆகிய மற்ற சமூக செயற்பாட்டாளர்களும் இருந்தனர்.

ஜூன் 1-ஆம் தேதி மேட்லீன் கப்பல் காசாவில் உணவுப் பற்றாக்குறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தாலியில் இருந்து புறப்பட்டது. காசாவை ஐக்கிய நாடுகள் சபை "பூமியில் மிகவும் பசியுள்ள இடம்" என்று அழைத்தது. 21 மாத போருக்குப் பிறகு, காசாவில் உள்ள முழு மக்களும் பஞ்சத்தின் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரித்தது. சர்வதேச கடல் பகுதியில் மேட்லீன் கப்பல் இடைமறிக்கப்பட்டதை துருக்கி "கொடூரமான தாக்குதல்" என்று கண்டித்தது. ஈரானும் இதை "இது ஒரு வகையான கடற்கொள்ளையர் செயல்" என்று கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x