முடிவுக்கு வந்த இந்தியாவுடனான மோதல்: சவுதி பட்டத்து இளவரசருக்கு பாக். பிரதமர் நன்றி

முடிவுக்கு வந்த இந்தியாவுடனான மோதல்: சவுதி பட்டத்து இளவரசருக்கு பாக். பிரதமர் நன்றி
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: இந்தியா உடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர உதவியதற்காக சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் மொகம்மது பின் சல்மானுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.

சவுதி அரேபியா சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமருடன் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தார், ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, தகவல் தொடர்பு அமைச்சர் அத்தாவுல்லா தரார் ஆகியோர் உடன் சென்றனர்.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சவுதி அரேபிய பயணம் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில், “சவுதி அரேபியாவுக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், மக்காவில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரை சந்தித்தார்.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதட்டங்களின் போது, பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் பட்டத்து இளவரசரின் உறுதியான அர்ப்பணிப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

இந்திய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் போது பொறுப்புடன் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் பாகிஸ்தானின் கொள்கையையும் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் சுட்டிக்காட்டினார். தெற்காசியாவில் நிலையான அமைதி என்பது பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதை வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் மற்றும் பட்டத்து இளவரசருக்கு பிரதமர் பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in