“இந்தியா - பாக். பதற்றத்தைத் தணித்தவர் ட்ரம்ப்” - ஷெபாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ புகழாரம்

“இந்தியா - பாக். பதற்றத்தைத் தணித்தவர் ட்ரம்ப்” - ஷெபாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ புகழாரம்
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணித்ததில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பங்கு குறிப்பிடத்தக்கது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோவும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் உதவ வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஷெரீப், "பஹல்காம் சம்பவம் ஒரு தவறான நடவடிக்கை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமைதியை விரும்பும் மனிதர். அதோடு, நன்மை பயக்கும் வணிக ஒப்பந்தங்களை விரும்புபவர் என்பதை எந்த சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபித்துள்ளார். அதிபர் ட்ரம்ப் பதற்றத்தை எதிர்ப்பவர், நேரடியான அல்லது மறைமுகமான போரை எதிர்க்கும் மனிதர். அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் புதுப்பிக்கப்பட்ட நட்புறவில் நுழைகின்றன" என தெரிவித்தார்.

மூன்று நாள் பயணமாக வாஷிங்டனுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் தூதுக்குழுவை வழிநடத்தும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, "பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை எளிதாக்க உதவியவர் என்ற முறையில், அதற்கான புகழுக்கு அதிபர் ட்ரம்ப் தகுதியானவர். அமெரிக்க அதிபர் என்ன சொல்கிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். 10 வெவ்வேறு சந்தர்ப்பங்களில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை எளிதாக்கிய பெருமை அவருக்கு உண்டு. போர் நிறுத்தத்தை சாத்தியமாக்க உதவியது அவரது முயற்சிகள்தான். எனவே, ஒரு விரிவான உரையாடலை (இந்தியா - பாகிஸ்தான் இடையே) அமெரிக்கா ஏற்பாடு செய்யுமானால் அது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா நீண்ட காலமாக தன்னை ஒரு வலுவான சக்தியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களும் இந்தக் கருத்தை ஆதரித்துள்ளனர். சீனாவுக்கு எதிரான ஒரு வலிமையான நாடு இந்தியா என்ற கருத்து இப்போது வலுவிழந்துவிட்டது. எனவே, அமெரிக்காவின் அணுகுமுறை மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்த பிராந்தியத்திற்கும், உலகின் பிற பகுதிகளுக்கும் உண்மையில் பாதுகாப்பை வழங்கக்கூடியது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதிதான்" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in