Published : 05 Jun 2025 11:29 AM
Last Updated : 05 Jun 2025 11:29 AM
நியூயார்க்: தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மேலும், 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதேபோல, புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் கையெழுத்திட்ட பிரகடனத்தில், "எனது முதல் நிர்வாகத்தின் போது, வெளிநாட்டினர் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவதை நான் தடை செய்தேன். இது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நமது எல்லைகளை அடைவதை வெற்றிகரமாகத் தடுத்தது.
ஜனவரி 20, 2025 இன் நிர்வாக ஆணை 14161 (வெளிநாட்டு பயங்கரவாதிகள் மற்றும் பிற தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாத்தல்) மூலமாக , நமது தேசிய பாதுகாப்பை அச்சுறுத்த குடியேற்றச் சட்டங்களைப் பயன்படுத்த விரும்பும் வெளிநாட்டினரிடமிருந்து நமது குடிமக்களைப் பாதுகாப்பது அமெரிக்காவின் கொள்கை என்று நான் குறிப்பிட்டேன்.
அதன்படி, அமெரிக்காவில் நுழைய அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டினர் அமெரிக்கர்களுக்கோ அல்லது அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கோ தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்த விசா வழங்கும் செயல்முறையின் போது அமெரிக்கா விழிப்புடன் இருக்க வேண்டும். அமெரிக்காவில் ஏற்கனவே இருக்கும் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டினர், நமது குடிமக்கள், கலாச்சாரம், அரசாங்கம், நிறுவனங்கள் அல்லது ஸ்தாபகக் கொள்கைகள் மீது விரோத மனப்பான்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதையும், நியமிக்கப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாதிகள் அல்லது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஆதரிக்கவோ, உதவவோ கூடாது என்பதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும். எனவே அமெரிக்காவிற்கு ஏற்படும் அபாயங்களை மதிப்பிடுவதற்கு போதுமான தகவல்கள் இல்லாத வெளிநாட்டினரின் நுழைவை தடுக்க பிரகடனத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அவசியம்’ என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.
12 நாடுகளுக்கு வழங்கப்பட்ட தடை உத்தரவு மற்றும் ஏழு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கான காரணங்களும் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தாலிபானால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது ஒரு பயங்கரவாதக் குழுவாகும். எனவே அந்நாட்டில் பாஸ்போர்ட் அல்லது சிவில் ஆவணங்களை வழங்குவதற்கு திறமையான அல்லது கூட்டுறவு மத்திய அதிகாரம் இல்லை. மேலும் இதற்கு பொருத்தமான சரிபார்ப்பு நடவடிக்கைகளும் அந்நாட்டில் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது..
மியான்மர் மீதான தடைக்கான முடிவு, அமெரிக்காவில் மியான்மர் நாட்டினரின் நீண்ட கால தங்கல் அறிக்கையை மேற்கோள் காட்டி எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட கால தங்கல் அறிக்கையின்படி, பர்மாவில் பி1/பி2 விசா நீண்ட கால தங்கல் விகிதம் 27.07 சதவீதமாகவும், எஃப், எம் மற்றும் ஜே விசாக்களில் நீண்ட கால தங்கல் விகிதம் 42.17 சதவீதமாகவும் உள்ளது. இருப்பினும், பர்மா கடந்த காலங்களில் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து அதன் நீக்கப்பட்ட நாட்டினரை மீண்டும் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT