Last Updated : 04 Jun, 2025 12:00 PM

 

Published : 04 Jun 2025 12:00 PM
Last Updated : 04 Jun 2025 12:00 PM

ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள் தெஹ்ரான் போலீஸாரால் மீட்பு: தூதரகம் அறிவிப்பு

புதுடெல்லி: ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் போலீஸாரால் மீட்கப்பட்டதாக இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்களை தெஹ்ரான் போலீஸார் கண்டுபிடித்து விடுவித்ததாக ஈரானில் உள்ள உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன என்று ஈரான் தூதரகம் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.\

— Iran in India (@Iran_in_India) June 3, 2025

முன்னதாக, மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டதாக மே 1 அன்று தெஹ்ரான் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. பஞ்சாபைச் சேர்ந்த மூன்று பேரும் ஆஸ்திரேலியா செல்லும் வழியில் மே 1 அன்று ஈரானுக்கு வந்திருந்தனர். ஒரு உள்ளூர் பயண நிறுவனம் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல ஊதியம் தரும் வேலைகளை பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தது. இருப்பினும், ஈரானை அடைந்த சிறிது நேரத்திலேயே அவர்கள் 3 பேரும் காணாமல் போனார்கள்.

இந்த வழக்கு விசாரணையில் இருப்பதாக இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் மே 29 அன்று தெரிவித்திருந்தது. மூன்று இந்தியர்களின் வழக்கை ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் தூதரக விவகாரத் துறை, தொடர்புடைய நீதித்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து விசாரித்து வருவதாக ஈரான் தூதரகம் தெரிவித்தது. இதனையடுத்து தெற்கு தெஹ்ரானில் அமைந்துள்ள வரமின் என்ற நகரத்தில் மூன்று பேரும் மீட்கப்பட்டனர்.

இதற்கிடையில், காணாமல் போன மூன்று பேரை கண்டுபிடிக்க ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், ஈரானிய தரப்பிலிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும் மே 29 அன்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார். செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் ஜெய்ஸ்வால், “காணாமல் போன மூன்று பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம்.” என்று கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x