இந்தியாவுக்கு போட்டியாக உலக நாடுகளுக்கு அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்புகிறது பாகிஸ்தான்

பிலாவல் பூட்டோ
பிலாவல் பூட்டோ
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க பாகிஸ்தான் வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி குழுக்களை அனுப்புகிறது. ஒன்பது பேர் கொண்ட இந்தக் குழுவுக்கு முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமை தாங்குவார்.

ஏப்ரல் 22ல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது. சில நாட்கள் போர் பதற்றம் நீடித்த நிலையில், பின்னர் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்ட அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவை உலக நாடுகளுக்கு இந்தியா அனுப்பியது.

இந்தியாவின் இந்த நகர்வினை நகலெடுக்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களுக்கு தங்கள் நாடாளுமன்றக் குழுக்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த குழுக்கள் தங்கள் நாட்டின் நியாயம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்கவும், இந்தியாவால் நிறுத்தப்பட்ட சிந்து நீர் ஒப்பந்தத்தை மீட்டெடுக்கவும் முயற்சிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தரப்பில் 33 நாடுகளுக்கு 7 எம்.பிக்கள் தலைமையிலான 59 எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஏழு குழுக்கள் அனுப்பப்பட்டன. ஆனால் தற்போது இரண்டு பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு ஐந்து தலைநகரங்களுக்கு மட்டுமே செல்வார்கள். முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழு நியூயார்க், வாஷிங்டன் டி.சி., லண்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம் அமைந்துள்ள பிரஸ்ஸல்ஸுக்குச் செல்கிறது. பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சிறப்பு உதவியாளர் சையத் தாரிக் ஃபதேமி தலைமையிலான மற்றொரு குழு, திங்களன்று மாஸ்கோவிற்குச் சென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in