

எல்லைப் பாதுகாப்புப்படை (பிஎஸ்எப்) வீரரை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான். ஜம்மு காஷ்மீர் மாநிலம் செனாப் நதியில் கடந்த புதன்கிழமை படகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, நீரில் அடித்துச் செல்லப்பட்ட சத்யசீல் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பிடிபட்டார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திடம் பேச்சு நடத்தி சத்யசீலை இந்திய ராணுவம் சனிக்கிழமை மீட்டது. அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நான் சென்ற படகு எதிர்பாராதவிதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டு பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிட்டது. என்னுடன் படகில் இருந்த மற்றொரு வீரர் நீச்சல் அடித்து இந்திய எல்லைக்கு வந்துவிட்டார்.
எனக்கு நீச்சல் தெரியாததால் நான் படகிலேயே இருந்துவிட்டேன். பாகிஸ்தான் வீரர்கள் என்னை மீட்டனர். நான் யார் என்பதை விசாரித்த பிறகு அவர்கள் என்னை நன்றாகவே நடத்தினர். பாகிஸ்தான் வீரர்கள் என்னிடம் இவ்வளவு நன்றாக நடந்து கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று சத்யசீல் கூறினார். இந்தியா திரும்பியுள்ள அவர் தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக சொந்த ஊர் சென்றுள்ளார்.