இந்தியர்களை யாராலும் பிரிக்க முடியாது: லாத்​வியாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

இந்தியர்களை யாராலும் பிரிக்க முடியாது: லாத்​வியாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு
Updated on
1 min read

இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று திமுக கட்சி எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவை உலகுக்கு அம்பலப்படுத்தவும், 'ஆபரேஷன் சிந்தூர்' போன்ற இந்தியாவின் தற்காப்பு உரிமையை எடுத்துரைக்கவும் சர்வதேச நாடுகளுக்கு இந்திய பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள 7 அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவும் ஒன்று. இந்த குழுவினர் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணமாகி உள்ளனர். இதில் ரஷ்யா, சுலோவேனியா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் லாத்வியா நாட்டை அடைந்தனர்.

லாத்வியா நாட்டின் ரிகா நகரில் வசிக்கும் இந்தியர்களுடன் கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் கலந்துரையாடினர். அப்போது கனிமொழி பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டனர். அப்போது அவர்களின் குடும்பங்கள், அன்புக்குரியவர்கள், குழந்தைகள் முன்னிலையில் 26 அப்பாவி உயிர்களை இழந்தோம். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியர்களை பிரித்துப் பார்க்க விரும்புகின்றனர். எங்கள் நம்பிக்கைகளின் அடிப்படையில் நம்மைப் பிரிக்க அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் காஷ்மீர் மக்கள், இந்தியர்களாக பாகிஸ்தானுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி ஒன்றாக நின்றபோது, இனி எதுவும் நம்மைப் பிரிக்கப் போவதில்லை என்ற செய்தி மிகத் தெளிவாக இருந்தது. இனி நம்மை யாராலும், எதற்காகவும் பிரிக்க முடியாது என்ற செய்தியை உலகுக்கு அறிவித்துவிட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, ரிகாவில் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்வில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. இதை ரிகாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் தயாரித்திருந்தனர். அந்த குறும்படத்தில் இந்திய சமூகத்தின் ஒற்றுமை மற்றும் ஆதரவு குறித்து வலியுறுத்தியதற்காக கனிமொழி அவர்களை பாராட்டினார்.

அப்போது அவர் கூறும்போது, "லாத்வியாவில் இந்திய சமூகத்தைப் பார்ப்பது மிகவும் மனதைக் கவரும் அனுபவமாக இருந்தது. குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர்கள் திரையிட்ட குறும்படத்தைப் பார்ப்பது மிகவும் மனதைக் கவரும் அனுபவமாக அமைந்தது. இது இந்திய ராணுவத்துக்கும், நமது நாட்டைப் பாதுகாக்க அவர்கள் செய்த பெரும் தியாகங்களுக்கும் ஒரு அஞ்சலியாக அமைந்தது" என்றார். நிகழ்ச்சியில் ஐரோப்பிய யூனியனுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் மஞ்சீவ் சிங் புரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழுவில் ராஜீவ் ராய் (சமாஜ்வாதி), மியான் அல்டாப் அகமது (ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி), பிரிஜேஷ் சவுடா (பாஜக), பிரேம் சந்த் குப்தா (ராஷ்டிரிய ஜனதா தளம்), அசோக் குமார் மித்தல் (ஆம் ஆத்மி), முன்னாள் தூதர் ஜாவேத் அஷ்ரப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in