பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட எத்தியோப்பியா துணைப் பிரதமர் உறுதி

பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட எத்தியோப்பியா துணைப் பிரதமர் உறுதி
Updated on
1 min read

அடிஸ் அபாபா: பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவுடன் இணைந்து எத்தியோப்பியா பணியாற்றும் என்று அந்நாட்டின் துணைப் பிரதமர் ஆதம் ஃபரா, இந்திய தூதுக்குழுவிடம் உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை உலகுக்கு எடுத்துச்சொல்லும் நோக்கில் பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு தூதுக்குழுக்களை அனுப்பி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தலைமையிலான குழு, எத்தியோபியா தலைநகர் அடிஸ் அபாபாவில் அந்நாட்டின் துணை பிரதமர் ஆதம் ஃபராவைச் சந்தித்தது.

இந்த சந்திப்பு தொடர்பாக எத்தியோப்பியாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, எத்தியோப்பியாவின் துணைப் பிரதமர் ஆதம் ஃபராவைச் சந்தித்தது. பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற எத்தியோப்பியாவின் வலுவான உறுதிப்பாட்டை அவர் தெரிவித்தார்.

இன்று, அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு ஆப்பிரிக்க ஒன்றியத்துடன் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தியது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எதிர்ப்பதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டது. இந்த தொடர்பு, உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைத் தடுப்பதிலும் எதிர்த்துப் போராடுவதிலும் இந்தியாவுக்கு ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கும் இடையே அதிக கவனம் செலுத்த வழி வகுக்கிறது," என்று தெரிவித்துள்ளது.

இந்திய தூதுக்குழு, எத்தியோப்பியாவின் முன்னாள் பிரதமர் ஹைலேமரியம் டெசலெக்னைச் சந்தித்தது. துணைப் பிரதமராகவும் வெளியுறவு அமைச்சராகவும் இருந்த ஹைலேமரியம், மே 2011-இல் இரண்டாவது இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சி மாநாட்டை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்தப் பயணத்தின் போது, ​​இந்திய தூதுக்குழு, எத்தியோப்பியாவின் ஊடகங்கள், சிவில் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் இந்திய சமூகம் போன்ற பரந்த அளவிலான பங்குதாரர்களுடன் கலந்துரையாட இருக்கிறது.

சுப்ரியா சுலேவைத் தவிர, இந்தக் குழுவில் பாஜக தலைவர்களான ராஜீவ் பிரதாப் ரூடி, அனுராக் தாக்கூர், வி. முரளீதரன், காங்கிரஸ் தலைவர்கள் மணீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் லாவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயுலு, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் விக்ரம்ஜீத் சிங் சாஹ்னி மற்றும் முன்னாள் தூதர் சையத் அக்பருதீன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in