

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆட்சி அமைவதற்கான தயாரிப்புப் பணிக்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான்.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்-பக்துன்கவா ஆகிய 4 மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ), ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ மகன் பிலவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி), மதவாதக் கட்சிகளை உள்ளடக்கிய முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமால் (எம்எம்ஏ) கூட்டணி, அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்டன.
இதில், மொத்தமுள்ள 342 இடங்களில் 270 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் பிடிஐ 117 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. நவாஸ் கட்சி 62 இடங்களிலும், பிபிபி கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கான 137 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் சில கட்சிகள், சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க இம்ரான் கான் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இம்ரான் கானின் வெற்றியை விமர்சித்து வருகிறார்கள். இம்ரான் கானுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யை உதவியதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்த நிலையில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்துக்கு ஐ. நா.சபை ஆதரவு அளித்துள்ளது.
பாகிஸ்தான் மக்களுக்கு ஐ. நா. பாராட்டு
பல இடங்களீல் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தும் ஜனநாயக கடமையாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று தங்கள் வாக்கைப் பதிவிட்ட பாகிஸ்தானின் மக்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு வாழ்த்துகள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.