அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு நெருக்கடி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு நெருக்கடி
Updated on
1 min read

டாக்கா: வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர், அரசு ஊழியர்களை தொடர்ந்து தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களால் இடைக்கால அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது.

இவரது அரசு சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு முடிவுகளை வலிந்து திணிப்பதாக புகார் எழுந்த நிலையில் பொதுத்தேர்தலை தாமதப்படுத்த சதி நடப்பதாக முன்னாள் பிரதமர் கலீதா ஜியா குற்றம் சாட்டினார். இந்த ஆண்டு டிசம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என அவரது வங்கேதச தேசியவாத கட்சி (பிஎன்பி) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையில் இடைக்கால அரசு தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக ராணுவ தளபதி வாக்கர்-உஸ்-ஜமான் குற்றம் சாட்டினார். வங்கதேசத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும், ராணுவ விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என அரசுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

யூனுஸ் அரசு அண்மையில், தவறான நடத்தைக்காக அரசு ஊழியர்களை விசாரணையின்றி 14 நாட்களுக்குள் பணிநீக்கம் செய்யும் அவசர சட்டத்தை பிறப்பித்தது. இதற்கு எதிராக அரசு ஊழியர்கள் கடந்த சனிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசுப் பணிகள் முடங்கியுள்ளன.

இந்நிலையில் வங்கசேத்தில் தற்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் நாடு முழுவதும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 5-ம் தேதி முதல் பகுதி அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த இவர்கள், கடந்த திங்கள்கிழமை முழு வேலைநிறுத்தம் தொடங்கியதாக 'டெய்லி ஸ்டார்' நாளேடு தெரிவிக்கிறது.

ராணுவத்தின் அழுத்தத்தை தொடர்ந்து தற்போது எதிர்க்கட்சிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களால் வங்கதேச இடைக்கால அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in