Published : 24 May 2025 07:57 AM
Last Updated : 24 May 2025 07:57 AM

ராணுவ தளபதியுடன் கருத்து வேறுபாடு: வங்கதேச தலைமை ஆலோசகர் ராஜினாமா?

டாக்கா: வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர்-உஸ்-ஜமான் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் மீண்டும் வெடித்தால் வங்கதேசத்தில் மீண்டும் கலவர சூழல் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, தேசிய குடிமக்கள் கட்சியின் (என்சிபி) ஒருங்கிணைப்பாளர் நஹித் இஸ்லாம், முகமது யூனுஸை ஜமுனாவில் உள்ள அதிகாரப்பூர்வமான இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்தை நடத்தினார்.

இதையடுத்து நஹித் இஸ்லாம் பிபிசி பங்களா செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: வங்கதேசத்தில் தற்போதைய நிலைமையில் தன்னால் பணியாற்ற முடியாத சூழல் இருப்பதாக யூனுஸ் கவலை தெரிவித்துள்ளார். இதனால் அவர் தனது தலைமை ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி தீவிரமாக யோசித்து வருகிறார். எனினும் அதுபோன்ற பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று நான் யூனுஸிடம் வலியுறுத்தி உள்ளேன். இவ்வாறு நஹித் இஸ்லாம் தெரிவித்தார்.

வங்கதேச தலைமை ராணுவ தளபதி வாக்கர்-உஸ்-ஜமான் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில வாரங்களாகவே வங்கதேச இடைக்கால அரசின் நிர்வாகத்துக்குள் குழப்பமும், பதற்றமும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கதேச ராணுவ தளபதி மற்றும் தலைமை ஆலோசகர் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பல முக்கிய விவகாரங்களில் இடைக்கால அரசுக்கும் மற்ற அரசியல் குழுக்களுக்கும் இடையே அதிருப்தி உருவாகியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் எடுக்கும் முக்கிய முடிவுகளில் ராணுவம் ஓரங்கட்டப்பட்டு வருகிறது. பல நடவடிக்கைகள் சரியான ஆலோசனைகள் இல்லாமல் எடுக்கப்படுகின்றன என்பது ராணுவத் தலைவரின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய தேர்தலுக்கான அவசரத் தேவையையும் யூனுஸிடம் ராணுவ தளபதி வலியுறுத்தி உள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால அரசாங்கம் எவ்வாறு சக்தி வாய்ந்த வெளிப்புற காரணிகளுடன் இணைந்து நாட்டுக்கான முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் என்பது ராணுவ தளபதியின் கேள்வியாக உள்ளது.

தேர்தல் நடத்தி மக்களிடமிருந்து ஆட்சி அதிகார உரிமையை பெற்ற பிறகே பொதுமக்களின் நலன் மற்றும் விருப்பம் சார்ந்த முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே ராணுவ தலைமை தளபதியின் கருத்தாக உள்ளது. இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x