Published : 03 Aug 2014 08:00 AM
Last Updated : 03 Aug 2014 08:00 AM

எங்கும் எதிலும் ராணுவமயம்: இலங்கையில் தொடரும் அத்துமீறல்

கொழும்பு இலங்கை பாதுகாப்புத் துறை சார்பில் கடந்த ஜூலை தொடக்கத்தில் அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் (என்.ஜி.ஓ.) ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் என்.ஜி.ஓ.க்கள் தங்கள் "சட்டவிரோத நடவடிக்கைகளை" உடனடியாக நிறுத்தும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.



ஜூலை 7-ம் தேதியிட்ட அந்தக் கடிதத்தை, பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் என்.ஜி.ஓ.க்களுக்கான தேசிய செயலர் அனுப்பியுள்ளார். கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "சட்டவிரோத நடவடிக்கைகள்" பட்டியல் என்.ஜி.ஓ.க்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பு- சட்டவிரோதம்:

என்.ஜி.ஓ.க்கள் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தக் கூடாது, பத்திரிகையாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை, பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யக்கூடாது, பத்திரிகை செய்திக் குறிப்புகளை வெளியிடக் கூடாது என்று அந்த கடிதத்தில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் "சட்டவிரோத நடவடிக்கைகள்" என்று கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வாதிகார நாடுகளில்தான் இதுபோன்ற அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படும், பாதுகாப்புத் துறை அனுப்பியுள்ள கடிதம் இலங்கை ஒரு சர்வாதிகார நாடு என்ற குற்றச்சாட்டை வலுப்படுத்துவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர் கரு ஜெயசூர்யா கூறியபோது, 'இலங்கை அரசின் நடவடிக்கை பத்திரிகை சுதந்திரம், பேச்சுரிமை மீது விழுந்த பேரிடி' என்று விமர்சித்துள்ளார்.

டிரான்ஸ்பாரன்ஸி இன்டர் நேஷனல் என்ற அமைப்பு சார்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நீர்கொழும்பில் அண்மையில் நடைபெற்றது. இதனை சிலர் தடுத்து நிறுத்தி பத்திரிகையாளர்களை விரட்டியடித்தனர். இதே அமைப்பு இதற்கு முன்னர் தமிழ் பத்திரிகையாளருக்கான முகாமை நடத்திய போது இலங்கை ராணுவமே மூக்கை நுழைத்து தடுத்து நிறுத்தியது. இதனால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு எழுந்துள்ளது. இதுகுறித்து பயிற்சி முகாமை நடத்திய இதழியல் துறை மூத்த ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: புலனாய்வு செய்தி சேகரிப்பு சட்டவிரோதம் என்றும் அவ்வாறு செய்தி சேகரிக்க முயன்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் பத்திரிகையாளர்கள் மறைமுகமாக மிரட்டப்படுகிறார்கள். டிரான்ஸ்பாரன்ஸி இன்டர்நேஷனல் சார்பில் அண்மையில் சிங்கள பத்திரிகையாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. அப்போது ராணுவத் தரப்பில் இருந்தோ வேறு தரப்பில் இருந்தோ எவ்வித எதிர்ப்பும் எழவில்லை. ஆனால் தமிழ் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அநீதி இழைக்கப்படுவது ஏன் என்று தெரியவில்லை. ஐ.நா. விசாரணைக் குழுவினருக்கு தமிழ் பத்திரிகையாளர்கள் தகவல்களை அளிக்கக்கூடும் என்று அரசு கருதுகிறது. அதன்காரணமாகவே இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்றன என்றார்.

எங்கும் எதிலும் ராணுவம்:

வடக்கு மாகாணத்தில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகளான பிறகும் அங்கு ராணுவம் வாபஸ் பெறப்படவில்லை. தொடர்ந்து ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு கொண்டே வருகிறார்கள். உயர் பாதுகாப்பு பகுதிகள் என்ற பெயரில் தமிழர்களின் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் ராணுவத்தால் வளைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணம் முழுவதும் ராணுவமயமாக மாறியுள்ளது. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஜி.ஏ.சந்திரஸ்ரீயை மீண்டும் ஆளுநராக நியமிக்கக் கூடாது, ராணுவம் சாராத ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி உரக்க குரல் எழுப்பியும் இலங்கை அரசின் செவிகளில் ஏறவே இல்லை. மீண்டும் அவரே ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார். கட்டுமானம், ஊரக வளர்ச்சித் துறையிலும் ராணுவத்தின் தலையீடு அதிகரித்துள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் ஊரக வளர்ச்சித் துறை பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறையையும் ராணுவம் விட்டுவைக்கவில்லை.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்கள் பலர், பல்வேறு நாடுகளின் தூதர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக "தி சண்டே டைம்ஸ்" நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது. நாட்டின் கல்வித் துறையிலும் ராணுவம் வைத்ததுதான் சட்டம் என்று "எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி" இதழில் 2013-ல் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிதியாண்டிலும் இலங்கையின் பொது பட்ஜெட்டில் ராணுவத்துக்கான ஒதுக்கீடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பட்ஜெட்டின் மொத்த மதிப்பீட்டில் ராணுவத்துக்கு மட்டும் 20 சதவீதம் ஒதுக்கப்படுகிறது.

புதுவகை சர்வாதிகாரம்:

பொதுவாக சர்வாதிகார நாடுகளில் ராணுவமே தலைமை பொறுப்பேற்று செயல்படும். இலங்கையைப் பொறுத்தவரை அனைத்து அரசுத் துறைகளிலும் ராணுவம் நீக்கமற நிறைந்திருந்தாலும் இன்றுவரை அரசின் கைப்பாவையாக மட்டுமே உள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் டிரான்ஸ் பாரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் ஜே.சி.வெலியாமுனா கூறியபோது, அரசின் அனைத்துத் துறைகளும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன, அதேநேரம் ராணுவம் இலங்கை அரசின் முழு கட்டுப் பாட்டின் கீழ் உள்ளது என்றார்.

சர்வதேச கண்காணிப்பு அதிகரிக்கும்

30 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளை ராணுவம் வீழ்த்தியதை நினைவுகூரும் 5-ம் ஆண்டு வெற்றிவிழா மாத்தறையில் கடந்த மே மாதம் வெகு விமரிசையாக நடைபெற்றது. போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளான பிறகும் ராணுவம் தொடர்ந்து அதே வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருக்கிறது. அதன் செயல்பாடுகளும் அப்படியே உள்ளன. போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் அந்த நாட்டு அரசு ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து ஊக்குவித்தால் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு மேலும் இறுகக்கூடும் என்று நடுநிலையாளர்கள் பகிரங்கமாக எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x