

ஜப்பானில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.
இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம், "ஜப்பானில் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நாட்டின் முக்கிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் இதுவரை 87 பேர் பலியான நிலையில் திங்கட்கிழமை வெளியான தகவலின்படி பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.
தொடர்ந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஜப்பான் வானிலை மையம் எச்சரித்துள்ளது.