இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

காசாவில் இஸ்ரேலின் புதிய வான்வழி தாக்குதலில் 24 மணி நேரத்தில் 146 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். சுமார் 250 இஸ்ரேலியர்களை பணய கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் தீவிரவாதிகள் மீது போர் தொடுத்த இஸ்ரேல் காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளையில் பணய கைதிகளில் பலரை போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையிலும் ராணுவ நடவடிக்கை மூலமும் மீட்டுள்ளது.

இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் கடந்த வியாழக்கிழமை முதல் கடும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் 24 மணி நேரத்தில் 146 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும் 450-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு கடந்த மார்ச் மாதம் முடிவுக்கு வந்த பிறகு காசா மீதான கடுமையான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மத்திய கிழக்கு நாடுகள் பயணத்தை, புதிய போர் நிறுத்தத்தை நோக்கி எந்த முன்னேற்றமும் இல்லாமல் கடந்த வெள்ளிக்கிழமை முடித்துள்ள நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in