Published : 23 Aug 2014 10:00 AM
Last Updated : 23 Aug 2014 10:00 AM

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டம் 9-வது நாளாக தொடர்கிறது: பேச்சுவார்த்தை தோல்வி

பாகிஸ்தானில் அரசுத் தரப்புக்கும் இம்ரான் கான் தலைமையில் போராட்டம் நடத்தி வரும் எதிர்த்தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அரசுக்கு எதிரான போராட்டம் வெள்ளிக்கிழமை 9 வது நாளை எட்டியது. இது பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் எதிர்த்தரப்பினர் தொடர்ந்து உறுதியாக இருப்பதே பேச்சுவார்த்தை தோல்வியடைய முக்கியக் காரணமாகும்.

பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற்றுள்ளார். எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தி வருகிறார்.

இதைப் போராட்டமாக முன்னெடுத்துள்ள இம்ரான் கான், மதத் தலைவர் தாஹிர் உல் காத்ரி ஆகியோர் பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ம் தேதி லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்துக்கு எதிர்ப்பு பேரணியை தொடங்கி வைத்தனர்.

இப்போது, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைந்துள்ளனர். நாடாளுமன்றம், பிரதமரின் இல்லம் உள்பட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதி, உயர் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ளனர். இந்த முற்றுகைப் போராட்டம் இரவு பகலாக நீடித்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இம்ரான் கான் அவர்கள் மத்தியில் பேசி வருகிறார். வியாழக்கிழமை இரவு பேசிய அவர், இந்த வார இறுதிக்குள் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், அதற்காக பொதுமக்கள் திரண்டு எழ வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார்.

நவாஸ் அரசின் மற்றொரு எதிர்ப்பாளரான மதத் தலைவர் தாஹிர் உல் காத்ரி, இந்த ஆட்சி முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கூறியுள்ளார். எனினும் அரசுத் தரப்பு பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வுகாண தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் எதிர்த் தரப்பில் இருந்து அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

பிரச்சினைகளை பேசித் தீர்க்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால் எதிர்த்தரப்பினர்தான் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று பாகிஸ்தான் அமைச்சர் அசன் இக்பால் குற்றம்சாட்டியுள்ளார்.

போராட்டத்துக்காக இஸ்லாமாபாத்தில் திரண்டுள்ள ஆதரவாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக ராக் இசைப் பாடகர் சல்மான் அகமதின் நிகழ்ச்சியை இம்ரான் கான் தரப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதே நேரத்தில் மதத் தலைவர் தாஹிர் உல் காத்ரி சார்பில் அவரது ஆதரவாளர்களுக்கும் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்ரான் கான் கட்சியினரின் போராட்டத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்த விவாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது இம்ரான் கானின் கட்சி தவிர்த்து நாட்டில் உள்ள பிற 11 கட்சிகளும் நவாஸுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நவாஸ் விரைவில் சில தீர்வுகளை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x