ஹாங்காங், சிங்கப்பூரில் வேகமடையும் கரோனா புதிய அலை: சீனாவிலும் பரவுகிறது

ஹாங்காங், சிங்கப்பூரில் வேகமடையும் கரோனா புதிய அலை: சீனாவிலும் பரவுகிறது
Updated on
1 min read

ஆசிய நாடுகளில் கரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சீரடைய பல ஆண்டுகள் ஆனது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு அதனை அரசுகள் கட்டுப்படுத்தின.

இந்நிலையில் ஆசிய நாடுகளில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

ஹாங்காங்கில் சளி மாதிரிகள் பரிசோதனையில் கரோனா பாசிட்டிவ் விகிதம் சமீபத்தில் ஒரு வருடத்தில் மிக அதிக அளவை எட்டியது. மே முதல் வாரத்தில் இறப்புகள் உட்பட கடும் நோய் பாதிப்பு ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 31 ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங்கில் கழிவுநீரில் காணப்படும் வைரஸ் அளவு, கரோனா தொடர்பான மருத்துவ ஆலோசனை, மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் ஆகியவை இத்தொற்று வேகமாகப் பரவி வருவதை காட்டுகிறது.

இதுபோல் சிங்கப்பூரிலும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இங்கு மே முதல் வாரத்தில் வைரஸ் பாதிப்பு முந்தைய வாரத்தை விட 28% அதிகரித்து, நோயாளிகள் எண்ணிக்கை 14,200 ஆக உயர்ந்தது. இதுபோல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர் எண்ணிக்கை 30% அதிகரித்தது. வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதால் தினசரி பாதிப்பு குறித்து தகவல்களை மக்களிடம் சிங்கப்பூர் அரசு பகிர்ந்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவலுக்கு மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது உள்ளிட்டவை காரணமாக இருந்தாலும் தற்போதைய வைரஸ் திரிபு மிக வேகமாகப் பரவக்கூடியதாகவோ அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவோ தோன்றவில்லை என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. சீனாவின் பிரதான நிலப் பரப்பு மற்றும் தாய்லாந்திலும் கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in