‘இந்தியா - பாக். போரை நிறுத்தியது நான்தான்’ - ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம்

அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்
Updated on
1 min read

தோஹா: “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான்” என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இருதரப்புக்கும் இடையே அமெரிக்கா தான் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக ஆறாவது முறையாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்தியா. தொடர்ந்து இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் ட்ரோன் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டது. அதை இந்தியா வானிலேயே இடைமறித்து அழித்தது.

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் முதலில் அறிவித்தார். இதையடுத்தே இந்தியாவும், பாகிஸ்தானும் அது தொடர்பாக பொதுவெளியில் பேசின. போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் அறிவித்தது சர்ச்சையானது.

“நான் அதைச் செய்தேன் என்று சொல்ல விரும்பவில்லை. ஆனால், கடந்த வாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்க்க நான் உதவினேன். அது நடக்காமல் போயிருந்தால் நிலைமை மேலும் சிக்கலாகி இருக்கும்” என கத்தாரில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய போது ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பதவியேற்றது முதலே இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல், உக்ரைன் - ரஷ்யா போர் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in