விஷ்ணு இரிகிரெட்டி
விஷ்ணு இரிகிரெட்டி

அமெரிக்காவில் மலையேற்ற விபத்தில் இந்தியர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

Published on

நியூயார்க்: அமெரிக்காவில் நிகழ்ந்த மலையேற்ற விபத்தில் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். வடமேற்கு அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் காஸ்கேட்ஸ் மலைத்தொடர் உள்ளது.

இந்நிலையில் சியாட்டில் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநரான விஷ்ணு இரிகிரெட்டி (48) கடந்த சனிக்கிழமை தனது 3 அமெரிக்க நண்பர்களுடன் இந்த மலைத்தொடரின் 'நார்த் இயர்லி வின்ட்டர் ஸ்பயர்' பகுதியில் ஏறினார்.

அப்போது புயல் வருவதை கவனித்த மலேயற்ற குழு பின்வாங்கத் தொடங்கியது. அவர்கள் இறங்கும்போது ஒரு கட்டத்தில் நங்கூரம் பெயர்ந்ததில் 200 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தனர். இதில் விஷ்ணு உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ட்செலிக் என்ற ஒரு மலையேற்ற வீரர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார்.

அவர் கடின மலைப் பகுதியில் இரவு முழுவதும் நடந்து சென்று தனது காரை அடைந்தார். பிறகு மிக அருகில் உள்ள கட்டண தொலைபேசி மையம் சென்று அதிகாரிகளிடம் உதவி கோரினார். இதையடுத்து மீட்புக்குழு ஹெலிகாப்டரில் சென்று 3 பேரின் உடல்களை மீட்டது.

விஷ்ணு, கிரேட்டர் சியாட்டில் பகுதியில் உள்ள ஃப்ளூக் கார்ப்பரேஷன் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். அவர் அனுபவம் மிகுந்த ஒரு மலையேற்ற வீரர், இயற்கையை ரசிப்பது மற்றும் இயற்கையை காப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in