இலங்கை பள்ளத்தாக்கில் நடந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

இலங்கையின் கோட்மலி என்ற இடத்தில் நேற்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த அரசுப் பேருந்தை மீட்கும் பணி நடைபெற்றது. படம்: பிடிஐ
இலங்கையின் கோட்மலி என்ற இடத்தில் நேற்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த அரசுப் பேருந்தை மீட்கும் பணி நடைபெற்றது. படம்: பிடிஐ
Updated on
1 min read

இலங்கையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் மலைப்பகுதிகள் நிறைந்த ஆன்மிக நகரமான கதரகாமாவிலிருந்து நேற்று புறப்பட்ட அரசுப் பேருந்து, குருநேகலா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 70 பேர் பயணித்துள்ளனர். மலைப்பாங்கான கோட்மலி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினரும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் பயணிக்க வேண்டிய பேருந்தில் கூடுதலாக 20 பேர் பயணித்ததே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந் விபத்துக்கு இயந்திரக் கோளாறு, ஓட்டுநரின் கவனக்குறைவு உட்பட வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

உலக அளவில் சாலைகள் மோசமாக உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று ஆகும். இதனால் அங்கு ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. நேற்று நிகழ்ந்த விபத்து கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமானது என கூறப்படுகிறது. அப்போது போலகாவெலா என்ற இடத்தில் லெவல் கிராஸிங்கை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in