ஆபரேஷன் சிந்தூர்: பாக். மீதான இந்திய ராணுவ நடவடிக்கை கவலை அளிப்பதாக சீனா கருத்து

ஆபரேஷன் சிந்தூர்: பாக். மீதான இந்திய ராணுவ நடவடிக்கை கவலை அளிப்பதாக சீனா கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை கவலை தருவதாக சீனா கருத்து தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு தரப்பும் இந்நேரத்தில் அமைதி காக்க வேண்டியது அவசியம் என்றும் சீனா கூறியுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டது இந்தியா. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சீனா வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

“இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். தற்போது அங்கு நிலவும் நிலை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். இந்த இரு நாடுகளும் சீனாவின் அண்டை நாடுகள். அனைத்து வகையான தீவிரவாதத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக இரு தரப்பினரும் செயல்பட வேண்டியது அவசியம்.

அமைதியாக இருக்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை கவலை தருகிறது” என சீன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in