சமரச முயற்சி: இந்திய பயணத்துக்கு முன்பாக பாகிஸ்தான் உடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை

பாகிஸ்தானின் துணை பிரதமர் உடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.
பாகிஸ்தானின் துணை பிரதமர் உடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இந்தியாவுக்கு வருகை தரும் முன்பாக பாகிஸ்தான் சென்றுள்ளார்.

பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான முகம்மது இஷாக் தர் உடன் பேச்சுவார்த்தை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நடத்தினார். இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இரு தலைவர்களும் வலுவான பாகிஸ்தான் - ஈரான் உறவுகளுக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். வர்த்தகம், எரிசக்தி மற்றும் இணைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர்.

தெற்காசியாவின் தற்போதைய நிலைமை குறித்தும், அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது, சிக்கலான பிரச்சினைகளை ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான அவர்களின் இணைந்த உறுதிப்பாட்டை நிரூபிக்கும் ஆக்கபூர்வமான ராஜதந்திர முயற்சிகளை அவர்கள் ஒருவருக்கொருவர் பாராட்டினர். தலைமை மட்டத்தில் அதிகரித்த தொடர்புகளைப் பராமரிப்பது உட்பட பாகிஸ்தான்-ஈரான் உறவுகளில் வலுவான உத்வேகத்தைப் பேணவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோரையும் ஈரான் வெளியுறவு அமைச்சர் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்புகளின்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்தும், அமைதியை ஏற்படுத்துவதற்கான அதன் முன்னெடுப்புகள் மற்றும் விருப்பங்கள் குறித்தும் அவர் கேட்டறிவார் என கூறப்படுகிறது. இதனையடுத்து, வரும் வியாழக்கிழமை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இந்தியாவுக்கு வரை தர உள்ளார். அப்போது, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரைச் சந்தித்து அவர் பேச இருக்கிறார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அரக்சி கண்டித்திருந்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே புரிதலை உருவாக்க முயலப் போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த 25ம் தேதி அப்பாஸ் அரக்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "இந்தியாவும் பாகிஸ்தானும் ஈரானின் சகோதர அண்டை நாடுகள். பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளை ஈரானுடன் இந்தியாவும், பாகிஸ்தானும் கொண்டுள்ளன. மற்ற அண்டை நாடுகளைப் போலவே, நாங்கள் அவர்களை எங்கள் முதன்மையான முன்னுரிமையாகக் கருதுகிறோம்.

இந்த கடினமான நேரத்தில் அதிக புரிதலை உருவாக்க இஸ்லாமாபாத் மற்றும் புதுடெல்லியில் உள்ள எங்கள் அலுவலகங்களைப் பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்" என அப்பாஸ் அரக்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஏப்.22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் வலுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in