Published : 30 Apr 2025 05:41 PM
Last Updated : 30 Apr 2025 05:41 PM

தேசத் துரோக வழக்கில் சின்மயி கிருஷ்ண தாஸுக்கு வங்கதேச உயர் நீதிமன்றம் ஜாமீன்

டாக்கா: வங்கதேசத்தில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட சின்மயி கிருஷ்ண தாஸுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

வங்கதேசத்தில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து அர்ச்சகரும் இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான சின்மயி கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் கலவரத்துக்குப் பின், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்தார். அதன்பின் முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அப்போது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக சின்மயி கிருஷ்ணதாஸ் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அக்டோபர் 25-ம் தேதி சட்டோகிராம் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் சின்மயி கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட 18 பேர் வங்கதேச கொடியை அவமதித்ததாக பெரோஸ் கான் என்பவர் புகார் அளித்தார். இதன் பேரில், சின்மயி கிருஷ்ணதாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால் வங்கதேசத்தை விட்டு வெளியேறுவதற்காக டாக்கா விமான நிலையம் வந்த சின்மயி கிருஷ்ணதாஸ் கடந்தாண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவானது. அவரது ஜாமீன் மனுவை மெட்ரோபொலிடன் மாஜிஸ்திரேட் கடந்தாண்டு நவம்பர் 26-ம் தேதி நிராகரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்து அமைப்பினர் நீதிமன்றத்துக்கு வெளியே சிறை வாகனத்தை சுற்றி வளைத்து போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த மோதலில் சைபுல் இஸ்லாம் ஆலிப் என்ற வழக்கறிஞர் உயிரிழந்தார்.

சிறையில் இருந்தபடி சின்மயி கிருஷ்ண தாஸ், சத்தோகிராம் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை கடந்த ஜனவரி 2-ம் தேதி நடைபெற்றது. அப்போது காணொலி மூலம் நீதிமன்றத்தில் கிருஷ்ண தாஸ் ஆஜர்படுத்தப்பட்டார். தேசத் துரோக வழக்கு என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து கிருஷ்ண தாஸின் ஜாமீன் மனுவை நீதிபதி சைபுல் இஸ்லாம் நிராகரித்தார்.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சின்மயியின் வழக்கறிஞர் அபுர்பா குமார் பட்டாச்சார்ஜி, தனது கட்சிக்காரரின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், விசாரணையின்றி நீண்டகாலமாக அவர் சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டியும் ஜாமீன் கோரிக்கையை பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார். இந்த வழக்கில் இருதரப்பு வாதம் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த சின்மயியின் வழக்கறிஞர் பிரஹ்லாத் தேப்நாத், "உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டுப் பிரிவு தடுத்து நிறுத்தாவிட்டால், உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x