Published : 13 Jul 2018 10:35 AM
Last Updated : 13 Jul 2018 10:35 AM

உலக மசாலா: செவ்வாய்க்கு செல்லும் முதல் பெண்!

அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது ஆலிஸா கார்சன், செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் முதல் மனிதராகத் தேர்வாகியிருக்கிறார்! 18 வயதுக்குக் கீழுள்ளவர்களை நாசா ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் ஆலிஸாவின் ஆர்வத்தைக் கண்டவர்கள், 33 வயதில்தான் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லப் போகிறார் என்பதால் இவரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவருக்கு ‘ப்ளூபெர்ரி’ என்றபெயரை வைத்து, பயிற்சியும் அளித்திருக்கிறார்கள். அத்தனை பயிற்சிகளையும் முடித்து, செவ்வாய் கிரகத்துக்குச் செல்வதற்கான முதல் பாஸ்போர்ட்டைப் பெற்றிருக்கிறார் இவர். 2033-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறை மனிதர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியங்கள் குறித்து இவர்கள் ஆராய்ச்சி செய்வார்கள்.

“3 வயதிலே தொலைக்காட்சியில் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் கார்ட்டூன் தொடர்களைப் பார்த்திருக்கிறேன். நான் செவ்வாய் கிரகத்துக்குப் போக வேண்டும் என்று அப்பாவிடம் சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் வளர வளர ஆசிரியராக வேண்டும், அமெரிக்க அதிபராக வேண்டும் என்றெல்லாம் லட்சியம் மாறிக்

கொண்டே இருந்தது. இறுதியில் என் ஆசை செவ்வாய் கிரகத்திலேயே நிலைபெற்றுவிட்டது. 7 வயதில் என் அப்பாவுடன் சேர்ந்து அலபாமா விண்வெளி பயிற்சி முகாமுக்குச் சென்றேன். 12 வயதில் அலபாமா, கனடா, துருக்கியில் நடைபெற்ற நாசாவின் 3 பயிற்சி முகாம்களிலும் பங்கேற்றிருக்கிறேன். இதன்மூலம் 3 பயிற்சிகளையும் முடித்த முதல் மனிதர் என்ற சிறப்பைப் பெற்றேன். விண்வெளி தொடர்பான நிகழ்ச்சிகள், முகாம்கள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். அதனால் எனக்கு செவ்வாய்க்குச் செல்லும்பயிற்சி மற்றவர்களை விட எளிதாக இருந்தது. நான் முதல் ஆளாகபாஸ்போர்ட்டைப் பெற்றுவிட்டாலும் 18 வயதுவரை நாசாவின் அதிகாரப்பூர்வமான விண்வெளி வீரராக அங்கீகரிக்கப்பட மாட்டேன். இப்போது ப்ளூபெர்ரி என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறேன். செவ்வாய் கிரகத்தில் தண்ணீரை ஆய்வு செய்வதுதான் என்னுடைய பணி. செவ்வாய்க்குச் சென்றால் மீண்டும் திரும்பி வரஇயலாது, திருமணம் செய்துகொள்ள முடியாது, குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது என்பதை எல்லாம் அறிந்தே செல்கிறேன்.

செவ்வாய் கிரகம் செல்லும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அதுவரை மாணவர்களுக்கு விண்வெளி குறித்த விளக்க உரைகள் நிகழ்த்திக் கொண்டிருப்பேன்” என்கிறார் ஆலிஸா.

“சின்ன வயது விருப்பம் எல்லோருக்கும் நிறைவேறுவதில்லை. ஆனால் ஆலிஸாவுக்கு நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிபுத்திசாலி, கடினமான உழைப்பாளி. எதையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார். தைரியம் அதிகம். ஆங்கிலம் தவிர ஸ்பானியம், பிரெஞ்சு, துருக்கி, சீனம் போன்ற மொழிகளையும் கற்றுக்கொண்டார். அதனால்தான் அவர் விருப்பத்தை நிறைவேற்ற அதிக அக்கறை எடுத்துக்கொண்டேன். செவ்வாய் கிரகத்துக்குச் சென்றால், மீண்டும் அவரைப் பார்க்க முடியாது என்பது வருத்தமான விஷயம்தான். ஆனால் என்னுடைய பாசம் அவருடைய லட்சியத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது. எங்களுடன் இருக்கப் போகும் இந்த 15 ஆண்டுகளை நாங்கள் அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்வோம்” என்கிறார் ஆலிஸாவின் அப்பா பெர்ட் கார்சன்.

ஆலிஸாவுக்கு செவ்வாய் தோஷம் இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x