Last Updated : 26 Apr, 2025 12:31 PM

 

Published : 26 Apr 2025 12:31 PM
Last Updated : 26 Apr 2025 12:31 PM

போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி

வாடிகன்: வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ள மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கத்தோலிக்க திருச்சபையில் கடந்த 1300 ஆண்டுகளில் முதல் ஐரோப்பியரல்லாத போப்பாக இருந்த போப் பிரான்சிஸ் தனது 88 வது வயதில் திங்கள்கிழமை உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வாடிகன் சென்றார். இரண்டு நாள் பயணமாக வாடிகன் சென்ற குடியரசுத் தலைவர் முர்மு, இந்திய அரசு மற்றும் மக்கள் சார்பாக பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தினார்.

குடியரசுத் தலைவருடன் சென்ற மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறுபான்மையினர் நலன் மற்றும் மீன்வளத்துறை, கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், கோவா சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜோசுவா டி ஜோசுவா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிகானில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் ஏப்.26-ம் தேதி போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கில் குடியரசுத்தலைவர் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே குடியரசுத் தலைவர் அலுவலகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாடிகனின் புனித பீட்டர் பசிலிக்காவில் போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x