போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்தலாம்
வாடிகன் சிட்டி: மறைந்த போப் பிரான்சிஸ் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும் வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் தனது 88-வது வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலமின்றி இருந்த அவர், அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் தேவாலயப் பணிகளை அவர் தொடர்ந்து செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அவர் ஆசி வழங்கினார்.
இந்நிலையில் மறுநாளான திங்கட்கிழமை காலையில் உள்ளூர் நேரப்படி காலை 7.35 மணிக்கு காலமானார். பெருமூளை பக்கவாதம், கோமா, இதயம் செயலிழப்பு என அடுத்தடுத்த பாதிப்புகளால் அவரது உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்தது.
இறப்புக்கான காரணம் குறித்த மருத்துவ அறிக்கையில் இரண்டாம் வகை நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சுவாசக் கோளாறு, நிமோனியா உள்ளிட்ட நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளும் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திறந்த சவப்பெட்டியில் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டிருக்கும் முதல் புகைப்படம் மற்றும் வீடியோவை வாடிகன் நேற்று வெளியிட்டது. அதில், மறைந்த போப்பாண்டவரின் உடல் சிவப்பு நிற வழிபாட்டு அங்கி அணிவிக்கப்பட்டு தலையில் மிட்ரே என்ற தலைப்பாகை மற்றும் கைகளில் ஜெபமாலையுடன் வைக்கப்பட்டு இருப்பது தெரிகிறது.
வாடிகனில் அவர் வசித்த காசா சாண்டா மார்ட்டா இல்லத்தின் தனிப்பட்ட தேவாலயத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ், அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் பிறந்தவர். லத்தீன் அமெக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் என்ற பெருமைக்குரியவர். கடந்த 2013 மார்ச் மாதம் அவரது பதவிக் காலம் தொடங்கியது. 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அவரது பதவிக் காலம் கருணை, பணிவு, சீர்திருத்தம், ஏழைகள் மீதான உலகளாவிய கவனம் உள்ளிட்ட சிறப்புகளை கொண்டிருந்தது.
போப் ஆண்டவர் மறையும்போது அவரது உடலை வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில் நல்லடக்கம் செய்வது பாரம்ரிய வழக்கமாகும். ஆனால் போப் பிரான்சிஸ் தனது உடலை ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பேராலயத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என இறுதி சாசனத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தனது கல்லறை எளிய முறையில் எவ்வித அலங்காரமும் இன்றி அமைக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் உடல் அவரது இல்லத்திலிருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு இன்று எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு இறுதிச் சடங்கு தொடங்க உள்ளது.
இதில் உலகம் முழுவதிலும் இருந்து கார்டினல்கள், பேராயர்கள், ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரை பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து போப் பிரான்சிஸ் உடல் ரோம் நகரில் உள்ள புனித மேரி பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் வாடிகன் நகருக்கு வெளியில் அடக்கம் செய்யப்படும் முதல் போப் என்ற பெருமையை பிரான்சிஸ் பெறுவார். போப் பிரான்ஸ்சிஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் பிறந்த அர்ஜென்டினாவில் ஒரு வாரத்துக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் நேற்று முதல் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. வெளிநாட்டு மதத் தலைவர் ஒருவரின் மறைவுக்கு இந்தியாவில் துக்கம் அனுசரிக்கப்படுவது அரிய நிகழ்வாகும்.
