Published : 22 Jul 2018 09:46 AM
Last Updated : 22 Jul 2018 09:46 AM

உலக மசாலா: சீனாவின் அதிசயக் குடும்பம்!

சீனாவின் ஷான்க்ஸி மாகாணத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் 12 குழந்தைகள் பிறந்து, வளர்ந்திருக்கிறார்கள்! சீனாவில் ஒரு குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டு, தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த காலத்தில் ஒரு குடும்பம் 12 குழந்தைகளைப் பெற்றிருப்பது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 11 பெண் குழந்தைகளுக்குப் பிறகு, ஓர் ஆண் குழந்தை பிறந்த பின்னரே பெற்றோர் குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்தியிருக்கின்றனர். ஆசியாவில் ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை இந்தக் குடும்பமும் எடுத்துக் காட்டியிருக்கிறது. இந்தப் பதினோரு பெண்களும் தங்களின் அன்பு தம்பிக்காக ஏராளமான தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். சமீபத்தில் தம்பியின் திருமணம் நடைபெற்றது. சகோதரிகள் அனைவரும் சேர்ந்து, திருமணப் பரிசாக ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

“எங்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏராளமான பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. அவர்கள் காலத்தில் ஆண் குழந்தைகள் மிகவும் உயர்வாகக் கருதப்பட்டனர். அந்த ஆசையில் 11 பெண் குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்கள். காவோ ஹாவோஸென் பிறந்த பிறகு குழந்தை பெற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டனர். என் அம்மாவுக்கு 20 வயதில் நான் பிறந்தேன். 47 வயதில் என் தம்பி பிறந்தான். வீட்டில் எப்போதும் வறுமை. என் தம்பியும் இரண்டு தங்கைகள் மட்டுமே பள்ளி சென்றிருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் சற்று வளர்ந்த உடன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டோம். வீட்டுச் செலவு போக, மீதி இருந்த பணத்தில் கூட எங்களுக்கென்று எதுவும் வாங்கிக்கொண்டதில்லை. தம்பிக்குத் துணி, படிப்பு என்று ஒவ்வொன்றையும் கவனித்துக்கொண்டோம். அரசாங்கத்திடம் பல முறை எங்கள் பெற்றோர் மாட்டிக்கொண்டு, அதிகக் குழந்தைகள் பெற்றதற்குத் தண்டனையாக அபராதங்களையும் கட்டியிருக்கிறார்கள். அதற்கும் நாங்கள்தான் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறோம். பதினோரு பேருடன் பிறந்ததால், தான் எந்தவிதத்திலும் கஷ்டப்பட்டதாக எங்கள் தம்பி நினைக்கக் கூடாது என்பதில் நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருந்தோம்” என்கிறார் மூத்த பெண்.

"என் அக்காக்கள் அனைவரும் எனக்கு அம்மாதான். 8 வயதிலிருந்து வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் எப்போதாவதுதான் புத்தாடைகளை வாங்கிக்கொள்வார்கள். அனைவரும் எனக்காகவே செலவு செய்தனர். தண்ணீர் கொண்டுவந்து தருவதைத் தவிர, வேறு எந்த உதவியும் என்னிடமிருந்து எதிர்பார்த்ததில்லை. அவர்களுக்கென்று தனித்தனி குடும்பம் இருந்தாலும் எல்லோரும் சேர்ந்து, 23 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வீட்டில் அனைத்துப் பொருட்களும் இருந்தன. என் சகோதரிகளுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்" என்கிறார் காவோ ஹாவோஸென்.

சமீபத்தில் இந்த விஷயம் பத்திரிகைகளில் வெளிவந்து, சீனாவைப் பரபரப்பில் ஆழ்த்திவிட்டது. சட்டத்தை மதிக்காமல் 12 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டது சரியா என்றும், ஆண் குழந்தைக்காக இத்தனை பெண் குழந்தைகளின் வாழ்க்கையைக் கஷ்டப்படுத்தியது சரியா என்றும் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. 

சீனாவின் அதிசயக் குடும்பம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x