ஏப்.30-க்குள் 80,000 ஆப்கானியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றிய பாகிஸ்தான்

ஏப்.30-க்குள் 80,000 ஆப்கானியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றிய பாகிஸ்தான்
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: ஏப்ரல் 30 காலக்கெடுவுக்கு முன்பாக 80,000 ஆப்கானியர்களை பாகிஸ்தான் நாட்டைவிட்டு வெளியேற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உரிய ஆவணங்கள் இல்லாத ஆப்கானியர்கள் அல்லது ஆப்கானிஸ்தான் குடியுரிமை அட்டை வைத்துள்ளவர்கள் மார்ச் 31-ம் தேதிக்கு பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாடு எச்சரித்திருந்தது. தவறினால் சம்மந்தப்பட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தது. பின்பு இந்தக் காலக்கெடு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் தலால் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏப்ரல் 30 என்பது இறுதிக்கெடு. பாகிஸ்தானில் தங்குவதற்கு தேவையான செல்லத்தக்க விசாக்களை வைத்திருப்பவர்களே இங்கு தங்க அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானின் இந்த வெளியேற்றும் நடவடிக்கை, கடந்த 2023-ம் ஆண்டின் பிற்பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் வெளிநாட்டினரை நாடுகடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏப்ரல் 30 காலக்கெடுவுக்கு முன்பாக 80,000 ஆப்கானியர்களை பாகிஸ்தான் நாட்டைவிட்டு வெளியேற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, நாட்டில் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் குழுவை உருவாக்கும் ஆப்கானியர்கள் மீது தீவிரவாதம் மற்றும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டினை மறுத்துள்ள ஆப்கானிஸ்தான் இந்தத் திருப்பியனுப்பும் நடவடிக்கை கட்டாய நாடுகடத்தல் என்றும் குற்றம்சாட்டியிருந்தது.

இதனிடையே, எல்லையைக் கடக்க ஆப்கானியர்கள் வடமேற்கு பாகிஸ்தான் எல்லையில் உள்ள டோர்ஹாமுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அவர்கள் தங்குவதற்கு பல்வேறு நகரங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in