Published : 16 Apr 2025 09:49 AM
Last Updated : 16 Apr 2025 09:49 AM
வாஷிங்டன்: “வரிப் பிரச்சினையில் இனி சீனா தான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவர்களிடம் தான் முடிவு இருக்கிறது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரஸ்பர வரி பட்டியலை கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா சீனாவின் கூடுதல் வரி விதிப்புக்கு அபராதமாக 50% வரியை விதித்தது. இதனால் சீனப் பொருட்களின் மீதான வரி 104% ஆனது. இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரி 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம் அறிவித்தது.
இந்தச் சூழலில் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் ட்ரம்ப். எனினும் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று தெரிவித்தார். மேலும் சீனாவுக்கான பரஸ்பர வரியை மட்டும் ட்ரம்ப் 125 சதவீதமாக அதிகரித்தார்.
இந்தக் கெடுபிடிகளுக்கு சீனா சற்றும் பணியாத சூழலில், சீன பொருட்கள் மீதான வரி 145% ஆக அதிகரிப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்தது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 145 சதவீத வரியும், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் கீழ் வராத அலுமினியம், ஆட்டோமொபைல்கள் மற்றும் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், மற்ற அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீத வரியும் விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
இந்த நிலையில், வரிப் பிரச்சினையில் இனி சீனா தான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவர்களிடம் தான் முடிவு இருக்கிறது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், “சீனாவிடம் தான் முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அவர்கள் தான் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமே தவிர நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை. எல்லா நாடுகளுக்கும் வரி விதித்ததைப் போலவே சீனாவுக்கும் வரி விதித்துள்ளோம். சீனா எங்களின் பணத்தை எடுத்துக் கொள்ள முற்படுகிறது. அதனால் அவர்களுக்கு கூடுதல் வரியை விதித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT