Published : 31 Jul 2018 09:06 AM
Last Updated : 31 Jul 2018 09:06 AM

உலக மசாலா: பணத்துக்காகப் பாலினத்தையே மாற்றிவிடுவதா?

கனடாவைச் சேர்ந்த ஓர் ஆண், கார் இன்சூரன்ஸ் கட்டணத்தைக் குறைவாகச் செலுத்துவதற்காகத் தன்னை பெண் என்று சட்டப்பூர்வமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்! 23 வயது டேவிட், புது பிராண்ட் கார் வாங்க விரும்பினார். ஆனால் அந்த காருக்கான இன்சூரன்ஸ் தொகை மிக அதிகமாகச் செலுத்த வேண்டியிருந்தது. இன்சூரன்ஸ் நிறுவனத்துக்குச் சென்று, தொகையைக் குறைக்க முடியுமா என்று கேட்டார். ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் என்பதைக் குறைக்க முடியாது என்றும், பெண்களுக்கு என்றால் சுமார் 76 ஆயிரம் ரூபாய் குறையும் என்றும் தெரிவித்தனர்.

”நான் நினைத்த காரை வாங்க முடியாதோ என்ற பயம் வந்தது. கார் எனக்குக் கண்டிப்பாக வேண்டும். ஆனால் இன்சூரன்ஸ் தொகையை என்னால் முழுவதுமாகச் செலுத்த முடியாது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இறுதியில் என்னுடைய பால் அடையாளத்தை மாற்றிக்கொள்ளத் தீர்மானித்தேன். இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் என் பாலினத்தை மாற்றும்படி கேட்டேன். அவர்களால் முடியாது என்று சொல்லிவிட்டனர். பிறகுதான் பிறப்புச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் சட்டப்பூர்வமாகப் பாலினத்தை மாற்றினால்தான் இன்சூரன்ஸ் தொகை குறையும் என்று தெரிந்தது. இரண்டிலும் எளிதாக என் பால் அடையாளத்தை மாற்றிக்கொண்டேன்.

 டேவிட், ஆல்பர்ட்டாவாக மாறினேன். இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அதைக் கொடுத்து, பெண்களுக்கான சலுகையைப் பெற்றுக்கொண்டேன். இதில் நான் எந்த விதத்திலும் யாரையும் ஏமாற்றியதாக நினைக்கவில்லை. ஆணுக்கு ஒரு விதமாகவும் பெண்ணுக்கு ஒரு விதமாகவும் சட்டம் இருக்கும்போது, அதைப் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு? சட்டப்படி நான் பெண். ஆனால் நிஜத்தில் ஆண். இதில் எந்தவிதத்திலும் எனக்குச் சங்கடம் இல்லை. இப்போது மாதம் 6,300 ரூபாய் எனக்கு மிச்சமாகிறது. சட்டத்தில் பால் அடையாளத்தை மாற்றுவதற்கான வழி இருக்கும்போது, அதைப் பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை” என்கிறார் டேவிட் என்ற ஆல்பர்ட்டா. இந்த விஷயம் வெளியே தெரிந்து, விவாதிக்கப்பட்டு வருகிறது. இனி யாரும் இப்படிப் பால் அடையாளத்தை மாற்றி, ஏமாற்றக் கூடாது என்பதற்காகச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இருக்கிறார்கள்.

அடப்பாவி, பணத்துக்காகப் பாலினத்தையே மாற்றிவிடுவதா?

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் வசிக்கிறார் நிவேஹா ஸ்மித். தனக்கு ஓர் உடை வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டார். அந்த உடையின் விலை மிக அதிகமாக இருந்தது. அவரால் அதை வாங்கிக் கொடுக்க இயலாது. ஆனால் மகளின் மனம் வருத்தப்படக் கூடாது என்பதற்காக, அந்த உடையை வாங்கிக் கொடுக்க முடிவு செய்தார். ஒரு நாளைக்கு 3 இடங்களில் உறக்கம், ஓய்வு இல்லாமல் வேலை செய்தார். பணம் சேர்ந்தவுடன், உடையை வாங்கி மகளிடம் கொடுத்தார். பிரித்துப் பார்த்த நிவேஹா, ஆச்சரியத்தில் குதித்தார். அப்பாவைக் கட்டி அணைத்தார். கண்ணீர் விட்டு அழுதார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள். இதுவரை பல லட்சம் தடவை இந்த வீடியோ பார்க்கப்பட்டிருக்கிறது.

அப்பாக்களே அற்புதம்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x