உலக நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்த ட்ரம்பை கண்டித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேரணி

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கரோலினா சார்லோட் நகரில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி  மாபெரும் பேரணி நடத்தினர்.படம்: பிடிஐ
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கரோலினா சார்லோட் நகரில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி மாபெரும் பேரணி நடத்தினர்.படம்: பிடிஐ
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் பொருளாதார கொள்கைகளுக்கு உலக அளவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளிலும் ட்ரம்புக்கு எதிராக முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பேரணி நடத்தி வருகின்றனர்.

வர்த்தக வரி விதிப்பு, அரசுப் பணிகளில் ஆட்குறைப்பு, மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எல்லை மீறி செயல்படுவதாக கூறி, வாஷிங்டன், நியூயார்க், ஹுஸ்டன், ப்ளோரிடா, கொலராடோ, லாஸ் ஏஞ்சல் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு ட்ரம்புக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

டிரம்பின் நடவடிக்கை குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், “ ஒரு சிலரின் விரும்பத்தகாத நடவடிக்கைகளால் மற்றும் மூர்க்கத்தனமான நிர்வாகத்தால் அமெரிக்காவின் நட்பு நாடுகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரின் செயல் இங்குள்ள மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்துகிறது. அவர் (ட்ரம்ப்) நமது அரசமைப்பு முறையை அழிக்கிறார்" என்று தெரிவித்தனர்.

தற்போது இந்தப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. அங்குள்ள மக்கள் ட்ரம்பின் தீவிர வர்த்தக கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க-பிரிட்டிஷ் இரட்டை குடியுரிமை பெற்றவர்களில் ஒருவரும், லண்டன் பேரணியில் பங்கேற்றவருமான லிஸ் சம்பெர்லின் கூறுகையில், “ ட்ரம்ப் ஒரு மனநிலை சரியில்லாதவர். அதனால்தான் அவர் எடுக்கும் பொருளதாரம் சார்ந்த முடிவுகளும் அதுபோல் உள்ளது. அமெரிக்காவில் என்ன நடக்கிறது. ஒவ்வொருவரும் பிரச்சினையில் உள்ளனர். ட்ரம்பின் நடவடிக்கை உலகப் பொருளாதாரத்தை மந்த நிலையில் தள்ளும்" என்றார்.

அமெரிக்கா தற்போது எடுத்துள்ள பொருளாதார கொள்கைகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ள போதிலும் அதிபரின் வெள்ளை மாளிகை அவற்றை முற்றிலும் நிராகரித்துள்ளது. ட்ரம்ப் தனது முடிவில் உறுதியாக உள்ளார். அதிலிருந்து பின்வாங்குவதற்கான எந்த சமிக்ஞையும் அவரிடமிருந்து இதுவரை தெரியவில்லை. “எனது கொள்கைகள் உறுதியானவை. அது ஒருபோதும் மாறாது" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in