பிரதமர் மோடியுடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு
Updated on
1 min read

பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸும் சந்தித்துப் பேசினர்.

வங்கக்கடல் பகுதியில் உள்ள நாடுகளின் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பான பிம்ஸ்டெக்-ன் 6-வது உச்சிமாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று நடைபெறுகிறது. இதில், இந்தியா, வங்கதேசம், பூட்டான், மியான்மர், நேபாள், இலங்கை, தாய்லாந்து ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப். 3) பாங்காக் சென்றார். இன்று, மியான்மரின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மியான்மரின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்கிடம், சமீபத்திய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்தேன். இந்த நெருக்கடியான நேரத்தில் மியான்மரில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு இந்தியா முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், குறிப்பாக இணைப்பு, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பல துறைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.” என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி, வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸை சந்தித்துப் பேசினார். வங்கதேசத்தில் நடந்த ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்நாட்டில் சிறுபான்மை இந்துக்கள் தாக்கப்பட்டதற்கு இந்தியா தனது கவலைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தது. அதேபோல், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதற்கு வங்கதேச அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே கசப்புணர்வு அதிகரித்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

வங்கதேச தலைமை ஆலோசகராக பதவியேற்ற உடன் முகம்மது யூனுஸ் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வர திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் புதுடெல்லியின் அழைப்பு இல்லாததால் அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டதாகவும் சமீபத்தில் அதன் வெளியுறவுச் செயலாளர் ஜாஷிமுதீன் கூறி இருந்தார்.

சீனாவில் அந்நாட்டின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய முகம்மது யூனுஸ், “இந்தியாவின் வட கிழக்கில் உள்ள 7 மாநிலங்கள் நிலத்தால் கட்டுண்டு கிடக்கின்றன. அந்த மாநிலங்களுக்கு கடல் மார்க்க பாதுகாப்புக்கு ஆதாரம் வங்கதேசம்தான். வங்கதேசத்துக்கு இருக்கும் இந்த புவியியல் நிலையைப் பயன்படுத்தி வங்கதேசத்தில் சீனா பொருளாதார ரீதியாக காலூன்ற வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

முகம்மது யூனுஸின் இந்த பேச்சுக்கு இந்திய தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த பின்னணியில் நரேந்திர மோடி - முகமது யூனுஸ் சந்திப்பு முக்கியத்தவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in