Published : 30 Jul 2018 04:40 PM
Last Updated : 30 Jul 2018 04:40 PM

‘இமெயிலைக்’ கண்டுபிடித்த தமிழர் மீது அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்: உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது

 

இமெயிலைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்திய இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிப்பவரும், தமிழருமான சிவா அய்யாதுரை மீது இனிவெறியுடன் அமெரிக்கர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

அமெரிக்கவாழ் இந்தியரான சிவா அய்யாதுரையின் பூர்வீகம் தமிழகத்தில் சிவகாசியாகும். சிறு வயதில் இருந்த அமெரிக்காவில் அய்யாதுரை வளர்ந்து வருகிறார். அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்தவராக அய்யாதுரை விளங்கி வருகிறார்.

நாம் பயன்படுத்தும் இமெயிலை கண்டுபிடித்து, உலகிற்கு அறிமுகம் செய்தவர் அய்யாதுரை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மசாசூட்ஸ் மாநிலத்தில் செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் சிவா அய்யாதுரை சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். இந்த மாநிலத்தில் செனட் உறுப்பினர் எலிசபெத் வாரணை எதிர்த்து அய்யத்துரை போட்டியிடுகிறார்.

இதற்காக அய்யாத்துரை தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன் அய்யாதுரை சாலையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

மசாசூட்ஸ் நகரில் உள்ள கிரேட் பாரிங்டன் பகுதியில் உள்ள டவுன்ஹால் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அய்யாதுரை ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, அங்கு வந்த எலிசபெத் வாரணின் ஆதரவாளர் ஒருவர், அய்யாத்துரையின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஆனால், அந்த நபரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், அய்யாத்துரை தொடர்ந்து ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டிருந்தார்.

இனவெறி கூடாது, யாருடனும் இனவெறியுடன் நடக்கக்கூடாது என்று அய்யாத்துரை பேசினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்தநபர் அய்யாத்துரையை ஒலிபெருக்கியோடு சேர்த்து முகக்தில் குத்தினார்.

இதில் அய்யாத்துரையின் முகத்தில் ஒலிபெருக்கி பட்டு, பல், உதடுபகுதி கிழிந்து ரத்தம் வடிந்தது. இதைப்பார்த்துக் கொண்டிருந்த அய்யாதுரையின் ஆதரவாளர்கள் அந்த நபரை பிடித்தனர்.

இதைக் கண்ட அப்பகுதியில் இருந்த போலீஸார் விரைந்துவந்து அய்யாத்துரை மீது தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் பால் சாபோலா எனத் தெரியவந்தது.

இந்த சம்பவத்தை அய்யாதுரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வேதனை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x