கழிவறையில் வாழும் சீன பெண்!

கழிவறையில் வாழும் சீன பெண்!
Updated on
1 min read

பெய்ஜிங்: சீனாவின் ஹுபெய் பகுதியை சேர்ந்தவர் யாங் (18). இவர் தற்போது ஹூனான் மாகாணம், ஜூஜோவ் நகரில் உள்ள பர்னிச்சர் கடையில் பணியாற்றி வருகிறார். அவரது மாதம் வருமானம் ரூ.31,776 ஆகும். ஜூஜோவ் நகரில் ஒரு வீட்டின் வாடகை ரூ.9,500 முதல் ரூ.21,000 வரை உள்ளது.

யாங் பெறும் ஊதியத்தில் பாதியை அவரது பெற்றோருக்கு அனுப்புகிறார். மீதமுள்ள ஊதியத்தில் அவரால் வீட்டு வாடகை கொடுப்பது கடினம். இந்த சூழலில் பர்னிச்சர் கடையின் கழிப்பறையை வாடகைக்கு தருமாறு கடை உரிமையாளரிடம் யாங் கோரினார்.

அவரது வறுமை சூழலை அறிந்த கடை உரிமையாளர் கழிப்பறையை ரூ.588 மாத வாடகைக்கு அளித்தார். தற்போது இளம்பெண் யாங், கழிப்பறை மற்றும் அதனை ஒட்டிய சிறிய பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் வாங்கும் ஊதியத்தில் என்னால் வாடகைக்கு வீடு எடுக்க முடியவில்லை. பர்னிச்சர் கடையின் கழிப்பறை, எனது வீடாக மாறிவிட்டது. பகலில் வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

எனவே கழிப்பறை மற்றும் அதை ஒட்டிய பகுதியில் இருக்கும் எனது பொருட்களை மொட்டை மாடியில் வைத்து விடுவேன். கடை மூடிய பிறகு கழிப்பறை பகுதிக்கு வந்துவிடுவேன். இங்குதான் சமையல் செய்கிறேன், துணி துவைக்கிறேன், தூங்குகிறேன்.

நான் எனது குடும்பத்தை பிரிந்து ஜூஜோவ் நகரில் தனியாக வசித்து வருகிறேன். எனது ஊதியம் குறைவு. எனது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு கடையின் கழிப்பறையில் வாழ்க்கை நடத்துகிறேன்.

நான் பெறும் ஊதியத்தில் எனது பெற்றோர், தம்பி வாழ்கின்றனர். தம்பியின் கல்வி செலவுக்கும் நானே பொறுப்பு. மீதமிருக்கும் ஊதியத்தை மாதந்தோறும் சேமித்து வருகிறேன். நிச்சயம் ஒருநாள் ஜூஜோவ் பகுதியில் சொந்த வீடு வாங்கி குடியேறுவேன்.

இவ்வாறு யாங் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in